ஸ்டாக்ஹோம், இலக்கியத்துக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான நார்வேயைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் போசேவுக்கு, 64, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக நோபல் பரிசு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு இந்த பரிசு அளிக்கப்படுகிறது.
தங்கப்பதக்கத்தால் ஆன நோபல் பரிசுடன், 8 கோடி ரூபாய் ரொக்கப்பரிசும் அளிக்கப்படுகிறது.
ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிச., 10-ம் தேதி, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடக்கும் நிகழ்ச்சியில் பரிசுகள் அளிக்கப்படுகின்றன.
ஆல்பிரட் நோபலின் விருப்பப்படி, அமைதிக்கான பரிசு மட்டும் நார்வே உள்ள ஒஸ்லோவில் வைத்து வழங்கப்படுகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நார்வே நாட்டு எழுத்தாளர் ஜான் போசேவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.
நார்வே நாட்டின் மிகச்சிறந்த நாடக ஆசிரியரான போசே, 40க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள், சிறார் இலங்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்டவை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய, ‘எ நியூ நேம்: செப்டாலஜி’ என்ற புத்தகம், 2022ம் ஆண்டு புக்கர் பரிசுக்கான இறுதி பட்டியலுக்கு தேர்வானது.
இவரது எழுத்துக்கள், குரலற்றவர்களுக்கான குரலாக இருப்பதாக நோபல் தேர்வு கமிட்டி தெரிவித்துள்ளது.
முதலிடம்
1901 முதல் இதுவரை 116 முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது;. இதில் 17 பேர் பெண்கள் பிரான்சைச் சேர்ந்த 16 பேர், இந்த பரிசை பெற்றுள்ளனர். அடுத்த இரு இடத்தில் அமெரிக்கா 13, பிரிட்டன் 13 உள்ளன. குறைந்த வயதில் வென்றவர் – ருத்யார்டு கிப்லிங் 41, பிரிட்டன் அதிக வயதில் வென்றவர் – டோரிஸ் லெஸ்ஸிங் 88, பிரிட்டன் நம் நாட்டைச் சேர்ந்த ரவீந்திரநாத் தாகூருக்கு, 1913ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்