ஓஸ்லோஈரானில், பெண்கள் உரிமை, ஜனநாயகம் மற்றும் மரண தண்டனைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருபவரும், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளரு மான நர்கீஸ் முகமதி, 51, என்பவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. மேற்காசிய நாடான ஈரானைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நர்கீஸ் முகமதிக்கு, இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர், ஈரானில் பெண்களுக்கான உரிமை, ஜனநாயகம் மற்றும் மரண தண்டனைக்கு எதிராக பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார். அவரது வாழ்நாளில், 13 முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை 31 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.
ஈரானில், எரிபொருள் விலை 2019ல் கடுமையாக உயர்த்தப்பட்டது.
இதை கண்டித்து, 2021ல் நடந்த போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற நர்கீஸ் முகமதி கைது செய்யப்பட்டார்.
அதன் பின், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தை மூடும் துணியை சரியாக அணியாத மாசா அமினி என்ற, 22, வயது பெண் போலீஸ் காவலில் இறந்தார்.
இதை கண்டித்து நடந்த போராட்டத்தில் நர்கீஸ் முகமதி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது சிறையில் உள்ள அவரது சமூக பணிகளை பாராட்டி, அமைதிக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இவர், இந்த பரிசை பெறும், இரண்டாவது ஈரானிய பெண். இதற்கு முன், ஷிரின் எபாடி என்ற ஈரானிய பெண், 2003ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்