கர்நாடக பட்டாசு விபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு-கர்நாடக எல்லையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் நேற்று (7-10-2023) ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான செய்தியினைக் கேட்டு துயரமடைந்தேன்.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்களை விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவைப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க அனுப்பிவைத்துள்ளேன். மேலும், இச்சம்பவம் குறித்து நமது தலைமைச் செயலாளர் கர்நாடக மாநில தலைமைச் செயலாளருடன் பேசியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களை தமிழ்நாட்டுக் கொண்டுவரவும் உரிய ஏற்பாடுகளை செய்ய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை அனுப்பிவைத்துள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட உத்தவிட்டுள்ளேன்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு குடோனில் வெடிவிபத்து: பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று (7-10-2023) மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசு பெட்டிகளை இறக்கும் போது திடீரென தீப்பிடித்ததில் பட்டாசு குடோன் எரிந்து நாசமானது. நகர் பகுதியில் இருந்த பட்டாசு குடோன் என்பதால் தீ மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதில் அருகில் இருந்த சில கடைகள் எரிந்து நாசமாகின. அங்கு நிற்கவைக்கப்பட்டிருந்த 9 வாகனங்களும் சேதமாகின.

தீபாவளி பண்டிகைக்காக குடோனில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் தீ விபத்து கட்டுப்படுத்த முடியவில்லை. 9 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றன. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதுமாக புகை மூட்டமாக காணப்பட்டது.

பட்டாசு கடை நடத்தி வரும் நவீன், தனது ஊழியர்களுடன் கன்டெய்னர் வாகனத்தில் இருந்து பட்டாசு பெட்டிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது இந்த எதிர்பாரா விபத்து ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.