காசா: இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து வடக்கு காசாவை விட்டு பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். 24 மணி நேரத்தில் காசா பொதுமக்கள் நகரை விட்டு வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, நகரை விட்டு காசா மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
தெற்கு காசாவில் இருந்து வடக்கு காசா நோக்கி ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து வருகின்றனர். காசாவின் பிரதான நெடுஞ்சாலை வழியாக நூற்றுக்கணக்கான கார்கள், மோட்டார் சைக்கிள்கள், டிரக்குகள் மூலமாக தங்களது எஞ்சிய உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறிவருகின்றனர். அதேசமயம் பல குடும்பங்கள் நடந்தே செல்கின்றனர். பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் மாடு, ஒட்டகம், செம்மறி ஆடுகள், கழுதை போன்ற வீட்டு விலங்குகளையும் அழைத்துச் செல்கின்றனர்.
காசா நகரில் வசிக்கும் ஃபரா அபோ செடோ என்பவர் பிபிசி-க்கு அளித்த பேட்டியில், “இஸ்ரேல் எச்சரிக்கையைக் கேட்ட பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. மக்கள் இங்கிருந்து வெளியேற நினைக்கிறார்கள். ஆனால் எங்கு செல்வது? இது ஒரு சிறிய நகரம், தப்பிக்க முடியாது என்பதால் நாங்கள் எங்கள் உயிரைக் காப்பாற்ற இங்கிருந்து நகர்ந்து வருகிறோம். ஒவ்வொரு இரவிலும் எந்த இரக்கமும் இல்லாமல் எங்கள்மீது குண்டு வீசுகிறார்கள். இழப்பதற்கு இப்போது எங்களிடம் எதுவும் மிச்சமில்லை. யாரும் எங்களைப் பாதுகாப்பதில்லை. எங்களுக்கு எந்த உதவியும் அனுப்புவதில்லை. இங்கும் பாதுகாப்பான இடம் இல்லை. நகரைவிட்டு வெளியேறுபவர்களில் நிறைய குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர். ஆனால், யாரும் எங்களுக்கு உதவவில்லை.” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 11 லட்சம் மக்களை வெளியேற்றும்படி ஐ.நா. மூலம் ஹமாஸ் குழுவுக்கு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் எச்சரித்திருந்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தெற்கு இஸ்ரேல் நகரான அஷ்கெலோனை குறிவைத்து ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ் இன்று காலை முதல் சரமாரியாக 150 ராக்கெட்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, இஸ்ரேலின் சஃபேட் நகரம் மீதும் ஹமாஸ் ஏவுகணை வீசியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருக்கிறார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காசாவில் இருந்து வடக்கு பிராந்தியத்தை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் படைகளால் முறியடிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் அதிருப்தி: காசா நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் எச்சரிக்கை, காசா நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதைப் போன்றது என்று உலக சுகாதார நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், காசா நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பத்திரமாக வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கு ஏற்ப தனி வழியை உருவாக்குமாறு ஹமாஸ் அமைப்பினரை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த தனிப் பாதை மருத்துவப் பணியாளர்களும் நோயாளிகளும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கானதாக இருக்க வேண்டும் என்றும் அது வலியுத்தியுள்ளது.
2800-க்கும் மேற்பட்ட உயிர் பலி: ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7-வது நாளாக பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இதுவரை 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 500 பேர் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1200 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல், காசா என இரு தரப்பிலும் சேர்த்து 2800-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன. பல ஆயிரக்கணக்கனோர் காயமடைந்துள்ளனர்.