காசா நகர்: இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்க தயாராக இருப்பதால் வடக்கு காசா பகுதி மக்கள் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
காசா நகரின் மேற்குப் பகுதிகள், காசா முனை பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அல்-ஷிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காசா பகுதியில் செயல்படும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ராக்கெட் குண்டுகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. எனவே பொதுமக்கள் ரத்த தானம்செய்ய முன்வருமாறு காசா பகுதி மருத்துவமனைகள் அழைப்பு விடுத்துள்ளன.
பாலஸ்தீன சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் காசா பகுதியில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,329 ஆக அதிகரித்துள்ளது. 9,024 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவர்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காசா பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்கள் கூறியதாவது:
இஸ்ரேல் ராணுவத்தின் எச்சரிக்கையால் வடக்கு காசாவில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் தெற்கு காசா பகுதிக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். இன்னமும் 6 லட்சம் பேர் வடக்கு காசா பகுதியில் உள்ளனர்.
காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்களும், ட்ரோன்களும் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி வருகின்றன. காசாவின் வடக்கு பகுதி மட்டுமன்றி தெற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வடக்கு காசா பகுதிகளில் உள்ள மருத்துவமனை வளாகங்களில் தஞ்சமடைந்து உள்ளனர். குடிநீர், உணவு, கழிப்பறை வசதியின்றி பாலஸ்தீன மக்கள் பரிதவித்து வருகின்றனர். காசாவில் ஞாயிற்றுக்கிழமை கன மழை பெய்தது. மழைக்கு ஒதுங்ககூட இடமில்லை.
காசா-எகிப்து எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் குவிந்துள்ளனர். எகிப்து ராணுவம் தனது காசா எல்லைப் பகுதியான ரஃபாவை மூடிவிட்டது. சுமார் 600 அமெரிக்கர்கள் காசா பகுதியில் சிக்கியுள்ளனர். அவர்களை எகிப்து எல்லை வழியாக மீட்க அமெரிக்க அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அவர்களுக்காக எகிப்து எல்லைப் பகுதி திறக்கப்பட்டால், அப்போது எகிப்துக்குள் நுழைந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்புடன் பாலஸ்தீன மக்கள் காத்திருக்கின்றனர்.
காசா பகுதி மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு முஸ்லிம் நாடுகள் சார்பில் எகிப்துக்கு உணவுப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள், மருந்துகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவை லாரிகளில் ஏற்றப்பட்டு எகிப்து-காசா எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.
எகிப்து அரசு எல்லைப் பகுதியை திறந்துவிட்டால் நிவாரண பொருட்கள் காசா பகுதிக்குள் கொண்டு வரப்படும். இவ்வாறு தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.