பெரிய ஷாக்… அதிரடி காட்டிய நெதர்லாந்து – தரம்சாலாவில் தப்புமா தென்னாப்பிரிக்கா?

ICC World Cup 2023, SA vs NED: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 15ஆவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் இன்று மோதின. தரம்சாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி தொடங்க தாமதமானது. 

குறுக்கிட்ட மழை

சற்று நேரத்திற்கு பின் ஓவர்கள் 43 ஆக குறைக்கப்பட்டது. நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய வந்தது. ஆரம்பத்தில் இந்த அணி பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை. ஒரு கட்டத்தில் 10.5 ஓவர்களுக்கு 40/3 என்ற நிலையில் இருந்தது. விக்கெட்டுகளும் சரிந்த நிலையில், 20.2 ஓவர்களுக்கு 82/5 என்ற நிலைக்கு வந்தது. அடுத்தடுத்து சிறிய பார்ட்னர்ஷிப் வந்தது.

கடைசி கட்டத்தில் அதிரடி

அந்த வகையில், 33.5 ஓவரில் நெதர்லாந்து 140 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அப்போதுதான், ரோலோஃப் வான் டெர் மெர்வே, கேப்டன் எட்வர்ட்ஸ் உடன் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தார். கேப்டன் எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்த நிலையில், 38 வயதான வான் டெர் மெர்வே சிங்கிள், டபுள்ஸ் என அடுத்தடுத்து ஓடி தனது ஃபிட்னஸை காட்டினார். அவர் பவுண்டரிகளை பறக்கவிட்டார். அவர் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் இன்னிங்ஸ்

அவரை அடுத்து இறங்கிய ஆர்யன் தத் முதல் பந்திலேயே அதிரடி காட்ட தொடங்கினார். ராபாடா வீசிய முதல் பந்தில் சிக்ஸர் அடித்து தொடங்கிய அவர் கடைசி கட்டத்தில் அதிரடியை காட்டினார். அதனால், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 245 ரன்களை எடுத்தது. விக்ரம் சிங் ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உள்பட 23 ரன்களையும், கேப்டன் எட்வர்ட்ஸ் ஆட்டமிழக்காமல் 69 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களுடன் 78 ரன்களையும் குவித்திருந்தார். 

ரன்களை வாரி வழங்கிய பௌலர்கள்

தரம்சாலாவில் வேகப்பந்துவீச்சு எடுபடும் என்றாலும், தென்னாப்பிரிக்காவின் பலம்வாய்ந்த பந்துவீச்சை நெதர்லாந்து தாக்குதல் பாணியில் ஆடி ரன்களை குவித்துவிட்டது. யான்சன், லுங்கி இங்கிடி, ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கோட்ஸி, கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  இருப்பினும், கோட்ஸி, இங்கிடி 57 ரன்களையும், ரபாடா 56 ரன்களையும் விட்டுக்கொடுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 43 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 245 ரன்களை எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.