மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் நாய் பயிற்சி மைய ஊழியர்கள், நாயை இரும்பு கேட்டில் தொங்கவிட்டுத் துடிதுடிக்கக் கொன்ற சம்பவம், வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
முன்னதாக, ஷாஜாபூரைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெய்ஸ்வால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாய் ஒன்றை வாங்கினார். பின்னர், அந்த நாயை கடந்த மே மாதம், போபாலின் மிஸ்ரோடிலுள்ள நாய் பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு அனுப்பினார்.

இதில், நிகில் ஜெய்ஸ்வாலிடம் மாதம் ரூ.13,000 பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. நாய்க்கான பயிற்சி செப்டம்பர் மாதத்தோடு நிறைவடையவிருந்தது. ஆனாலும், நிகில் ஜெய்ஸ்வாலிடம் நாய் ஒப்படைக்கப்படவில்லை.
இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாய் இறந்துவிட்டதாக, நிகில் ஜெய்ஸ்வாலிடம் அக்டோபர் 9-ம் தேதியன்று பயிற்சி மையம் கூறியிருக்கிறது. இருப்பினும், இதில் ஏதோ தவறு நடந்திருப்பதாகச் சந்தேகித்த நிகில் ஜெய்ஸ்வால், உடனடியாக போலீஸில் புகாரளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இதில் விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள், பயிற்சி மையத்தின் சிசிடிவி காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.

பின்னர், சைபர் செல் உதவியுடன் சிசிடிவி காட்சிகளை மீட்ட போலீஸ் அதிகாரிகள், பயிற்சி மைய ஊழியர்கள் நாயை இரும்பு கேட்டில் தொங்கவிட்டுத் துடிதுடிக்கக் கொன்றதைக் கண்டுபிடித்தனர். இறுதியில், பயிற்சி மையத்தின் ஆபரேட்டர் ரவி குஷ்வாஹா, ஓர் ஆண், ஒரு பெண் ஊழியர் ஆகியோர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.