கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்.
தற்போது 50வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கரைப் பாராட்டும் விதமாக அவருக்கு மிகவும் விருப்பமான மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சச்சின் தெண்டுல்கரின் ஆள் உயர சிலை நேற்று மாலை திறக்கப்பட்டது. இவ்விழாவில் மும்பை கிரிக்கெட்டில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்திய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, மும்பை கிரிக்கெட் அசோசியேசன் தலைவர் அமோல் காலே, சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகன் மற்றும் மகள் சாரா ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

இவ்விழாவிற்கு சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகர் ஒருவரும் அழைக்கப்பட்டு இருந்தார். சச்சின் தெண்டுல்கரின் 50 ஆண்டு கால வாழ்க்கைக்கு அவரின் ஆளுயர சிலை அர்ப்பணிக்கப்படுவதாக மும்பை கிரிக்கெட் அசோசியேசன் தெரிவித்துள்ளது.

விழாவில் பேசிய சச்சின் டெண்டுல்கர், ” இது உண்மையிலேயே எனக்கு ஒரு சிறந்த தருணம் ஆகும். இந்த இடத்தில் நிற்பது எனக்கு பல நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது” என்றார். சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் 664 போட்டிகளில் விளையாடி 34,357 ரன்களை எடுத்தார். இதில் 100 சதங்கள் மற்றும் 164 அரை சதங்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.