கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்றது. ஆனாலும்கூட, முதல்வர் பதவியை ஏற்கப்போவது சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா என்று சிறு குழப்பம் நீடித்தது. அதன் பிறகு டி.கே.சிவக்குமாரின் சில நிபந்தனைகளுக்குட்பட்டு, சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே.சிவக்குமாரை துணை முதல்வராகவும் நியமித்தது காங்கிரஸ் மேலிடம்.

இருப்பினும், கடந்த சில நாள்களாக கர்நாடக காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், `டி.கே.சிவக்குமார் முதல்வராக விரும்பினால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 19 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை நம்பலாம்’ என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்திருக்கிறார்.
பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முதல்வராக விரும்பினால், எங்களின் 19 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை நம்பலாம். காங்கிரஸில் நிலவும் சூழ்நிலையைப் பார்க்கும்போது, அங்கு எத்தனை பேர்தான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த அரசை TCM அல்லது DCM அரசாங்கம் என்றுகூட நீங்கள் அழைக்கலாம். TCM என்றால் தற்காலிக முதல்வர், DCM என்றால் டூப்ளிகேட் முதல்வர்” என்று முதல்வர் சித்தராமையாவையும் விமர்சித்தார்.

இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிரியங்க் கார்கே, “காங்கிரஸில் முற்றிலுமாக எந்தப் பிளவும் இல்லை. கட்சியில் அனைத்துப் பொறுப்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. எந்த முடிவை எடுக்க வேண்டுமானாலும், அதை உயர்மட்டக்குழு சரியான நேரத்தில் எடுக்கும்” என்று கூறினார்.