ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப் ஃபேக்’ வீடியோ எதிரொலி: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவிய நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீன் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்பம் வழியாக நடிகர், நடிகைகளின் படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்வதை பலரும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. தமிழ், தெலுங்கு இந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இவரின் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

அது ராஷ்மிகாவின் போலி வீடியோ என்று கண்டறிந்தபோது, சுமார் 15 மில்லியனுக்கும் மேலான பேர் அதை பார்த்திருந்தனர் எனக் கூறப்படுகிறது. அது, ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் இந்திய பெண்ணின் வீடியோ என்றும், ஏஐ டீப் ஃபேக் (Al Deepfake) தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனா போன்று மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது. இதையடுத்து, அமிதாப் பச்சன் அந்தப் போலி வீடியோவை பகிர்ந்து, ‘இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். மேலும், பல கண்டன குரல்களும் எழுந்தன.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து டீப் ஃபேக் என்ற தொழில்நுட்பம் மூலம் வீடியோ எடிட் செய்து பரபரப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தின் பக்கத்தில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு இணைய பயன்பாட்டாளர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தி வருகிறது. ஐடி விதிகளின்படி சமூக வலைதளங்கள் உண்மையான பதிவுகள் பகிரப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். தவறானவை பகிரப்பட்டால் 36 மணி நேரங்களில் அவை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் விதிகளை மதிக்காவிட்டால், அவர்களுக்கு எதிராக விதி 7 பயன்படுத்தப்படும். ஐபிசி விதிகளின் கீழ் அந்த நபர் குறிப்பிட்ட சமூக வலைதளம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். டீப் ஃபேக் வீடியோக்கள் மிகவும் மோசமானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு தமன்னா ஆடிய ஒரு ரீல்ஸ் வீடியோவில் சிம்ரனின் முகத்தை வைத்து ‘டீப் ஃபேக்’ என்ற ஏஐ தொழில்நுட்பம் மூலம் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட வீடியோ வைரலானதை அறிவோம். கடந்த சில நாட்களாக பல்வேறு தமிழ்ப் பாடல்கள் பிரதமர் மோடியின் குரலில் வெளியாகி வருகின்றன என்பது நின்னைவுகூரத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.