டெல்லி தலைமைச் செயலாளர் மீதான ரூ.850 கோடி ஊழல் புகார்: சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை 

புதுடெல்லி: துவாரகா விரைவு சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியதில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.850 கோடி ஊழல் குற்றச்சாட்டினை சிபிஐ விசாரணைக்கு டெல்லி அரசு இன்று (வியாழக்கிழமை) பரிந்துரை செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அமைச்சர் அதிஷி அனுப்பிய அறிக்கையை, துணைநிலை ஆளுநருக்கு புதன்கிழமை அனுப்பி வைத்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தலைமைச் செயலாளரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரியிருந்தார். இந்தநிலையில் முதல்வரின் இம்முன்னெடுப்பினைத் தொடர்ந்து ரூ.850 கோடி ஊழல் விவகாரத்தை விசாரிக்க மத்திய புலனாய்வு முகமை மற்றும் அலாக்கத்துறை ஆகிய இரண்டுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லி சேவைகள் மற்றும் விஜிலென்ஸ் துறை அமைச்சர் அதிஷி இந்த விவகாரம் தொடர்பாக முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அறிக்கை அளித்திருந்தார். அதில் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் அவரது மகனுக்கு சொந்தமான நிறுவனத்துக்காக ரூ.850 கோடி அளவில் நிலமோசடி ஊழலில் ஈடுப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

மொத்தம் 670 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விரிவான விசாரணை அறிக்கையில், துவாரகா விரைவுச்சாலை திட்டத்துக்காக பாம்னோலி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்திய நிலத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், தலைமைச் செயலாளர் தனது மகன் தொடர்புடைய நிறுவனம் பயனடையும் வகையில் நிலத்தின் மதிப்பினை 22 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் தலைமைச் செயலாளர் தனது மகன் கரண் சவுகான் தொடர்புடைய பல நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்கியதாகவும், விரைவு சாலைத் திட்டத்தின் மூலம் பயனடையும் நில உரிமையாளர்களுடன் கரண் சவுகானுக்கு வணிகத் தொடர்புகள் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.