குமரி இரட்டைக் கொலை வழக்கு; 12 ஆண்டுகளுக்குப் பிறகு கைதான `வெப்பன் சப்ளையர்' – யார் இந்த சதாசிவம்?

கன்னியாகுமரி மாவட்டம், தேரூரைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் ஆறுமுகம், ஆரல்வாய்மொழி வனத்துறை சோதனைச்சாவடியில் பணிபுரிந்துவந்தார். ஆறுமுகம் தன்னுடைய மனைவி யோகீஸ்வரியுடன் 10.11.2011 அன்று நாகர்கோவிலில் ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தேரூர் இசக்கி அம்மன் கோயிலைக் கடந்து சென்ற சமயத்தில் ஆறுமுகம், யோகீஸ்வரி தம்பதியை சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பிச்சென்றனர். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை வழக்கில் 14 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். 40 சென்ட் சொத்துக்கான தகராறு காரணமாக அந்தக் கொலை நடந்ததாகக் கூறி சகாயம், முண்டக்கண் மோகன் உள்ளிட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். சுமார் 7 ஆண்டுகளாக விசாரித்த போலீஸார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து வனத்துறை ஊழியரின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. 2019-ம் ஆண்டிலிருந்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்திவரும் நிலையில், இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இந்த வழக்கு ஜவ்வாக இழுத்துக்கொண்டே இருக்கிறது.

கொலைசெய்யப்பட்ட ஆறுமுகம், யோகீஸ்வரி

இதையடுத்து வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என வனத்துறை ஊழியரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், வனத்துறை ஊழியர் கொலை வழக்கில் துப்பாக்கி சப்ளை செய்ததாக சதாசிவம் என்பவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். வனத்துறை ஊழியர் கொலை வழக்கில் எட்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் சதாசிவம், நாகர்கோவிலை அடுத்த மறவன்குடியிருப்பைச் சேர்ந்தவர். சென்னையில் தலைமறைவாக இருந்த இவர்மீது, பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தேரூர் இரட்டைக் கொலை வழக்கில் துப்பாக்கி சப்ளை செய்ததாகக் கைதான சதாசிவம்

இந்த வழக்கில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டிருக்கும் தாத்தா செந்தில், சதாசிவம் உள்ளிட்டோர், மும்பையில் ஆயுதம் சப்ளை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சதாசிவம் தனது பெயரை சுரேந்தர் என மாற்றிக்கொண்டு குடும்பத்துடன் சென்னையில் வசித்துவந்திருக்கிறார். கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார் சதாசிவம். சென்னை பூந்தமல்லியில் பழைய வழக்கு ஒன்றில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆயுதம் சப்ளை செய்தது சதாசிவம் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்தே சதாசிவத்தை போலீஸார் நெருங்கிச் சென்று கைதுசெய்திருக்கின்றனர். இந்த வழக்கில் 11-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட செல்வம், 14-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ஜெபராஜ் ஆகிய இருவரும் இதுவரை கைதுசெய்யப்படாமல் இருக்கின்றனர். அவர்களைக் கைதுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.