“பிஆர்எஸ் ஊழல் கட்சி, காங்கிரஸ் ‘4ஜி’ கட்சி” – வாரிசு அரசியலை முன்வைத்து அமித் ஷா சாடல்

புதுடெல்லி: தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை ஒரு ’4ஜி கட்சி’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.

தெலங்கானாவின் கட்வாலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிஆர்எஸ் கட்சி என்றாலே ஊழல்தான். இந்தக் கட்சி மிஷன் பகீரதா ஊழலை செய்தது. மியாபூர் நில ஊழலை செய்தது. காளேஸ்வரம் திட்டத்தில் பிஆர்எஸ் கட்சி லஞ்சம் பெற்றது. மதுபான ஊழலையும் பிஆர்எஸ் கட்சி செய்திருக்கிறது. காங்கிரஸும், பிஆர்எஸ் கட்சியும் வாரிசு அரசியல் கட்சிகள் (dynastic parties). கேசிஆர் தனது மகனை முதல்வராக்க விரும்புகிறார், சோனியா காந்தி ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புகிறார். காங்கிரஸ், பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான கட்சிகள்.

கேசிஆரின் அலட்சியதுக்கு எதிரான பிரதமர் மோடியின் நல்லாட்சிதான் இந்தத் தேர்தல். இந்த அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில் உலக சாதனை படைத்துள்ளது. பிஆர்எஸ் (VRS) கட்சிக்கு விஆர்எஸ் கொடுக்க வேண்டிய நேரம் இது. இங்கு பாஜக ஆட்சி அமைத்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

ஏஐஎம்ஐஎம், பிஆர்எஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி கட்சிகள். காங்கிரஸ் ஒரு 4ஜி கட்சி. முதலில் ஜவஹர்லால் நேரு அதன் பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, தற்போது ராகுல் காந்தி. தெலங்கானாவை 2ஜி, 3ஜி, 4ஜி கட்சிகளிடமிருந்து விடுவித்து, நரேந்திர மோடிக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மாநிலத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு (religion-based reservation) அழிக்கப்படும். அதோடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும்” என்றார்.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.