ஏமனில் இருந்து சீறிப்பாய்ந்த ஆளில்லா விமானங்கள்.. செங்கடலில் வீழ்த்திய அமெரிக்க கடற்படை

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஹவுதி கிளர்ச்சிக் குழு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதலை நடத்துகிறது.

மேலும், இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் இஸ்ரேல் கொடியுடன் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் அனைத்தும் குறிவைக்கப்படும் என்றும் ஹவுதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். சமீபத்தில் துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அந்த கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், செங்கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தாக்குதல் நடத்துவதற்காக இன்று ஆளில்லா விமானங்கள் (தாக்குதல் டிரோன்கள்) அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை கண்காணித்த அமெரிக்க கடற்படையினர், பல்வேறு டிரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் ஒருவழி தாக்குதல் டிரோன்கள் என கூறப்பட்டுள்ளது. போர்க்கப்பல் மற்றும் வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.