ஆந்திர மாநிலம், பல்லநாடு மாவட்டத்தில், மனைவியின் குடும்பத்தினரால் கணவரும், அவரின் தாய், தந்தையரும் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புதன்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில் கொலைசெய்யப்பட்ட நபரின் பெயர் நரேஷ் (30) என்று தெரியவந்திருக்கிறது. இவர், பிடுகுரல்லா காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கோணங்கி கிராமத்தில், தாய் ஆதிலட்சுமி (60), தந்தை சாம்பசிவ ராவ் (52), மனைவி மாதுரி ஆகியோருடன் வசித்துவந்திருக்கிறார்.

விவசாயி மற்றும் நிதியுதவியாளருமான நரேஷ், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய முதல் மனைவியின் நடத்தையின் காரணமாக, அவரைப் பிரிந்து மாதுரியைத் திருமணம் செய்துகொண்டார். நரேஷுக்கும், மாதுரிக்கும் ஐந்து வயதில் மகனும் இருக்கிறார். மிகவும் சிக்கனமானவர் என்று கூறப்படும் நரேஷுக்கும், அவரின் மனைவி மாதுரிக்கும் இடையே அதனாலேயே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மாதுரிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதுகூட, அவரைக் கணவரும், மாமியாரும், சரியாகக் கவனிக்காமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமையன்று வயிற்றுவலி காரணமாக வயல் வேலையில் ஈடுபட மறுத்திருக்கிறார் மாதுரி. இதனால், மீண்டும் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர், தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மாதுரி கூற, உள்ளூர் மருத்துவர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து மருத்துவம் பார்த்திருக்கிறார் நரேஷ். அதைத் தொடர்ந்து, நரேஷுக்கும், மாதுரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், மாதுரி அன்றைக்கே தன்னுடைய தந்தை சுப்பா ராவ், சகோதரர் சீனிவாச ராவ் ஆகியோரை வீட்டுக்கு அழைத்திருக்கிறார்.

மாலையில், இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, மாதுரியின் சகோதரர் சீனிவாச ராவ் தான் கொண்டுவந்திருந்த கத்தியால், மாதுரி மற்றும் சுப்பா ராவின் உதவியுடன் நரேஷையும், அவரின் பெற்றோரையும் கத்தியால் குத்திக் கொலைசெய்தார். நரேஷும், அவரின் பெற்றோரும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடக்க, மாதுரி, அவரின் தந்தை, சகோதரர் ஆகிய மூவரும் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகிவிட்டனர். இந்தக் கொலை விவகாரத்தில், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் போலீஸாரும் தற்போது விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில், “முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறுதான் இந்த கொலைக்கு முக்கியக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பிடிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.