அண்மையில் என்னை சந்தித்து நிதித் திட்டமிடல் (Financial Plan) மேற்கொள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் தம்பதிகள் வந்தனர். கணவருக்கு 30 வயது, மனைவிக்கு 28 வயது. இருவரும் அவர்களின் 22-வது வயதில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்கள். மாதம் இருவருக்கும் சேர்ந்து ரூ.1.50 லட்சம் கைக்கு சம்பளம் வருவதாக தெரிவித்தார்கள். இது தவிர அவர்கள் இருவரும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் ஒன்றில் சிறப்பு வகுப்புகள் எடுக்கிறார்கள். அதன் மூலம் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கிறார்கள். ஆக மொத்தம் மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கிறார்கள்.

நிதி இலக்குகள்..!
அவர்களின் நிதி இலக்குகள் அனைத்தையும் விரிவாக கேட்டறிந்தோம். தங்களின் 2 வயது மகளின் உயர்கல்விக்கு இன்னும் 15 ஆண்டுகள் கழித்து ரூ.50 லட்சம் தேவை, இது தவிர அந்த மகளின் திருமணத்துக்கு இன்னும் 18 ஆண்டுகள் கழித்து ரூ.70 லட்சம் தேவை எனக் கணக்கிட்டு சொன்னோம். இதில் விலைவாசி உயர்வு என்கிற பணவீக்க விகிதத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்.
இன்னும் ஐந்தாண்டுகளில் கார் வாங்க ரூ.15 லட்சமும், 10 ஆண்டுகளில் சொந்த வீடு வாங்க ரூ.70 லட்சமும் அந்தக் குடும்பத்துக்கு தேவையாக உள்ளது. இவை தவிர இன்னும் 30 ஆண்டுகள் கழித்து 60 வயதில் பணி ஓய்வுக்கு ரூ.10 கோடி தேவைப்படும்.
தங்களின் தற்போதைய சம்பளம் ரூ.2 லட்சத்தில் வீட்டு வாடகை, இதர செலவுகள் எல்லாம் சேர்ந்து ரூ.60,000 செலவாகிறது. இந்த நிலையில் இந்த நிதி இலக்குகளுக்கான முதலீட்டை ஆரம்பிக்க முடியுமா? என சந்தேகத்துடன் கேட்டார்கள்.
அவர்களின் எல்லா நிதி இலக்குகளையும் நிறைவேற்றும் விதமாக நிதித் திட்டம் போட்டுக் கொடுத்ததோடு அவர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகள் எடுக்கவும் அவசரக் கால நிதியை ஏற்படுத்திக் கொள்ளவும் ஆலோசனை அளித்தோம்.

முதலீட்டுத் தொகை கணக்கீடு
மகள் உயர்கல்வி:
15 ஆண்டுகள் கழித்து ரூ.50 லட்சம் தேவை.
மாத எஸ்.ஐ.பி முதலீடு: ரூ.10,500
மகளின் திருமணம்:
18 ஆண்டுகள் கழித்து ரூ.70 லட்சம் தேவை
மாத எஸ்.ஐ.பி முதலீடு: ரூ. 9,825
சொந்த வீடு:
10 ஆண்டுகளில் ரூ.70 லட்சம் தேவை
மாத எஸ்.ஐ.பி முதலீடு: ரூ.31,250
சொந்த கார்:
ஐந்தாண்டுகளில் ரூ. 15 லட்சம் தேவை
மாத எஸ்.ஐ.பி முதலீடு: ரூ. 15,000
பணி ஓய்வு:
30 ஆண்டுகள் கழித்து 60 வயதில் ரூ.10 கோடி தேவை
மாத எஸ்.ஐ.பி முதலீடு: ரூ. 32,500
மொத்த எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகை ரூ. 99,075 ஆகும்.
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு..!
மொத்தச் சம்பளத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு சுமார் ரூ.1 லட்சம், குடும்பச் செலவு ரூ.60,000 போக மீதி இருக்கும் ரூ.40,000-ல் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் இன்ஷூரன்ஸ் இருவருக்கும் தலா ரூ.2 கோடிக்கு எடுக்கச் சொன்னோம். இருவருக்கும் அவர்களின் நிறுவனத்தில் தலா ரூ.15 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு இருக்கிறது என்பதால் அடிப்படை மருத்துவக் காப்பீடு பாலிசி மட்டும் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்துக்கு எடுக்கச் சொன்னோம். வேலை மாறும்போது மருத்துவக் காப்பீடு எதுவும் இல்லாமல் இருக்க கூடாது என்பதற்குதான் இந்த ஏற்பாடாகும்.

அடுத்து வரும் ஆண்டுகளில் சம்பளம் உயரும் போது அவர்களின் அனைத்து வாழ்க்கைமுறை (Lifestyle) தேவைகளை சுலபமாக நிறைவேற்றிக் கொள்வதோடு, எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையை அதிகரிக்கும் போது இலக்குகள் விரைந்து நிறைவேறும். பணி ஓய்வுக் காலம் வரைக்கும் காத்திருக்காமல் சுமார் 55 வயதிலேயே பணியிலிருந்து ஓய்வு பெற்று விட முடியும்.
எந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு?
இங்கே முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகள் உள்ள சொந்த கார் தேவைக்காக மூன்று பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட்களில் தலா ரூ.5,000 வீதம் முதலீடு செய்து வர வேண்டும்.
முதலீட்டுக் காலம் 10, 15 ஆண்டுகள் இருக்கும் நிதித் தேவைகளுக்கு மல்டி கேப், ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் போன்ற டைவர்சிபைட் ஃபண்ட்களில் முதலீடு செய்து வர வேண்டும். இதற்கு மேற்பட்ட முதலீட்டுக் காலம் கொண்ட நிதித் தேவைக்கு லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட், மிட் கேப் ஃபண்ட், ஸ்மால் கேப் ஃபண்ட்களில் ஒரு பகுதியை முதலீடு செய்வது மூலம் அதிக வருமானம் பெற முடியும்.

இந்தத் தேவைகளுக்கும் ஒரே ஃபண்டில் பணத்தை போடாமல் ரிஸ்க்கை குறைக்க சில ஃபண்ட்களில் பிரித்து முதலீடு செய்து வர வேண்டும். இதர முதலீடுகளுடன் ஒப்பிடும் போது பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களில் ஓராண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வருமான வரிக் கிடையாது. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 10% வரிக் கட்டினால் போதும் என்பதால்தான் பங்குச்சந்தை சார்ந்த ஃபண்ட்களில் முதலீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இந்த முதலீடுகளுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதம் வருமானம் கிடைப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்களை தேர்வு செய்வது அவசியமாகும்.