பா.ஜ.க தலைமையிலான இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில், பெரும்பான்மைச் சமூகமான பழங்குடியல்லாத மெய்தி இனத்தவர்களுக்கும், குக்கி பழங்குடியினத்தவர்களுக்கும் இடையே கடந்த மே மாதம் வெடித்த வன்முறை, இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போது, வன்முறை அரங்கேறிய வண்ணமே இருக்கிறது.

இப்படியான சூழலில், பிரிவினைவாத, பயங்கரவாத, வன்முறைச் செயல்களுக்காக ஒன்பது மெய்தி ஆதரவு அமைப்புகளைத் தீவிரவாத அமைப்புகள் என அறிவித்து, நவம்பர் 13 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் அவற்றுக்குத் தடை விதித்தது. அந்தப் பட்டியலில், `மக்கள் விடுதலை ராணுவம் (PLA), அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA), மக்கள் காங்கிலிபாக்கின் புரட்சிகரக் கட்சி (PREPAK), அதன் ஆயுதப் பிரிவான ரெட் ஆர்மி (Red Army), காங்க்லிபாக் கம்யூனிஸ்ட் கட்சி (கேசிபி), அதன் ஆயுதப் பிரிவான ரெட் ஆர்மி (Red Army), காங்லி யாயோல் கன்பா லுப் (KYKL), ஒருங்கிணைப்பு கமிட்டி (CorCom), சோசலிச ஒற்றுமைக்கான கூட்டணி காங்கிலிபாக்கின் (ASUK) அனைத்து பிரிவுகள், முன்னணி அமைப்புகள்’ ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், மேற்கூறிய அமைப்புகளைத் தீவிரவாத அமைப்புகள் எனத் தடை விதிக்க போதுமான காரணங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய, கவுஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி அடங்கிய தீர்ப்பாயம் ஒன்றை, மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்திருக்கிறது.
இது குறித்து, மத்திய அரசு தரப்பில் நேற்று வெளியான அறிக்கையில், `மெய்தி ஆதரவு அமைப்புகளை, மணிப்பூரில் தீவிரவாத அமைப்புகள் எனத் தடை விதிக்க போதுமான போதுமான கரணங்கள் இருக்கின்றனவா… இல்லையா என்பதை ஆராய்வதற்காக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ், கவுஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் மேதி அடங்கிய தீர்ப்பாயத்தை, மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்திருக்கிறது.

இந்த அமைப்புகள் மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர், பொதுமக்கள் ஆகியோர்மீதான தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்குப் பாதகமான செயல்களில் ஈடுபடுவதாகவும் அரசு நம்புகிறது. அதோடு, ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவிலிருந்து மணிப்பூரைப் பிரித்து ஒரு சுதந்திர தேசத்தை நிறுவுவதும், மணிப்பூரின் பழங்குடியினரை அத்தகைய பிரிவினைக்குத் தூண்டுவதும் இந்த அமைப்புகளின் நோக்கமாக இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.