சென்னை: வங்கக்கடலில் நிலவும் ‘மிக்ஜாம்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று இன்று மாலை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் அடங்கிய வட தமிழககடலோரப் பகுதியை நெருங்குகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘மிக்ஜாம்’புயலாக வலுப்பெற்று சென்னைக்கு தென்கிழக்கே 210 கி.மீ., ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவில் நிலவுகிறது. கடந்த 1, 2-ம் தேதிகளில் 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறிய பிறகு, தற்போது மணிக்கு 5 கி.மீ. என மிக மெதுவாக நகர்ந்து வருகிறது.
‘மிக்ஜாம்’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாகவலுப்பெறக்கூடும். இது இன்று (4-ம்தேதி) காலை தெற்கு ஆந்திரா மற்றும்அதை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவக்கூடும்.
110 கி.மீ. வேகத்தில் சூறாவளி: பின்னர், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இணையாக வடக்கே நகர்ந்து நாளை (5-ம் தேதி) காலை ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும். அந்த நேரத்தில்அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
புயல் தொடர்ந்து வலுப்பெற்று வருவதால், இன்று (4-ம் தேதி) வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதி கனமழையும், வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (5-ம் தேதி) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தரைக்காற்று எச்சரிக்கை: புயல் காரணமாக இன்று (4-ம் தேதி)சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் அதிகபட்சமாக 70 கி.மீ. வேகத்திலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
நேற்று (3-ம் தேதி) காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 32இடங்களில் கனமழையும், 2 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.
பள்ளிப்பட்டில் 15 செ.மீ. மழை: திருவள்ளூர் மாவட்டம்பள்ளிப்பட்டில் 15 செ.மீ., ஊத்துக்கோட்டையில் 13, தென்காசியில் 11, சென்னை ஆலந்தூர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 10, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆவடி,ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 9, சென்னை மீனம்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், பெருங்குடி, முகலிவாக்கம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, தென்காசி மாவட்டம் செங்கோட்டை, திருவள்ளூர், தாமரைப்பாக்கத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் காசிமேடு, மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் என அனைத்து பகுதிகளிலும் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன.