"அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை" – மழைநீர் தேங்குவது குறித்து சந்தோஷ் நாராயணன்

மிக்ஜாம் புயலால் சென்னையில் பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது . மக்களின் இயல்பு வாழ்க்கை  மிகவும்  பாதிக்கப்பட்டிருக்கிறது. 

பலரும் இதுதொடர்பாக குரல் கொடுத்து வரும் நிலையில்  இசையமைப்பாளர் சந்தோஷ்  நாராயணனும் தனது X வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்தப்பதிவில், “ கிட்டத்தட்ட 10   வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 100 மணி நேரமாவது முழங்கால் அளவு தண்ணீர் நீடிப்பதும், மின்வெட்டும் ஏற்படுவதும்  நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. இது கடினமான உண்மைதான். 

சந்தோஷ் நாராயணன்

ஆனால் இந்த வருடம் பெய்த மழை புதிய வரையறைகளை அமைத்திருக்கிறது. குறிப்பாக கொளப்பாக்கம் என்பது ஒரு ஏரியோ தாழ்வான பகுதியோ அல்ல. சென்னையில் மற்ற எந்தப் பகுதியையும் விட இங்கு ஏராளமான திறந்தவெளிகளும், குளங்களும் உள்ளன. அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை  இவையெல்லாம் மழைநீர் மற்றும் கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது. 

அதனால் ஒவ்வொரு தடவையும் ஆறுபோல் எங்கள் குடியிருப்புகளை மழைநீர் தாக்குகிறது. இந்த நேரத்தில்  நோய்வாய்ப்பட்டாலோ,  அல்லது மருத்துவ எமர்ஜென்ஸியில் இருந்தாலோ அவை மரணம் வரை கொண்டு செல்கிறது.  மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகும் சில பம்புகளும் நிரந்தரமாக உள்ளன. மக்களைத் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன்.

சென்னையில் எங்கு பார்த்தாலும் நேர்மறையான நெகிழ்ச்சியான எண்ணங்கள்  உள்ளன. சென்னை மக்களின் ஆன்மாவிற்குப் பாராட்டுக்கள்.  கூடிய விரைவில் தீர்வை எட்டுவதற்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். நியாயமற்ற எதிர்ப்பார்ப்புகள் ஏதும் எனக்கு  இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.