சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், டிச.9-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நேற்று (டிச.5) மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் தீவிர புயல் தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவுக்கு அருகே நண்பகல் 12.30 மணியிலிருந்து 2.30 மணி அளவில் கடந்தது. தமிழகத்தில் இன்று (டிச.6) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிச.7 மற்றும் டிச.8 ஆம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிச.9 ஆம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிச.10 முதல் டிச.12 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: டிச.8 மற்றும் டிச.9 ஆம் தேதிகளில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். டிச.10 ஆம் தேதி, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் வழியாக வெள்ள நீர் விரைவாக வடிந்து வருவதாகவும், வெள்ள பாதிப்பு பணிகளில் 75,000 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 866 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 4 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே இன்னும் மின் விநியோகம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். | முழு விவரம்: 866 இடங்களில் வெள்ளம், மீட்பு பணிகளில் 75,000 பேர், 4% பகுதிகளில் மின்தடை: தமிழக அரசு அப்டேட் @ மிக்ஜாம் பாதிப்பு