நடந்து முடிந்த தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தெலங்கானாவிலும், மற்ற மூன்று மாநிலங்களில் பா.ஜ.க-வும், மிசோரத்தில் ZPM கட்சியும் ஆட்சியமைக்கவிருக்கின்றன. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க 163 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 66 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
மத்தியப் பிரதேசத்தில் இந்த தோல்வி குறித்து பகுப்பாய்வு செய்வதற்காக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் கமல்நாத், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களுடனும் கலந்துரையாட இருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., திக்விஜய சிங், “சிப் உள்ள எந்த இயந்திரமும் ஹேக் செய்யப்படலாம். நான் 2003 முதல் EVM மூலம் வாக்களிப்பதை எதிர்க்கிறேன். நமது இந்திய ஜனநாயகத்தைத் தொழில்முறை ஹேக்கர்களால் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது! அனைத்து அரசியல் கட்சிகளும் இதை எதிர்த்து கேள்வி எழுப்ப வேண்டியது அவசியம்.
தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் தயவு செய்து நமது இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பீர்களா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்துப் பேசிய கமல்நாத், “சில காங்கிரஸ் தலைவர்களின் EVM ஹேக்கிங் குறித்த குற்றச்சாட்டுக்கு, ஆலோசனைகளை நடத்தாமல் ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது, முதலில் அனைவரிடமும் கலந்து பேச வேண்டும். இருப்பினும் கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கிராமத்திலேயே 50 வாக்குகள் கூடப் பெறவில்லை என்று சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம்? என்பதுதான் புரியவில்லை.

ஆனாலும், எதிர்க்கட்சி என்ற பொறுப்பைக் காங்கிரஸ் சிறப்பாக நிறைவேற்றும்” எனக் குறிப்பிட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் இந்தமுறை தங்களின் அரசு அமையும் எனக் காங்கிரஸ் அசைக்க முடியாத நம்பிக்கையிலிருந்தது. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக, வாக்கு எண்ணப்படும் போதே, போபாலில் கமல்நாத்திற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டது.
ஆனால், மத்தியப் பிரதேசத்தின் எதிர்பாராத தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கமல்நாத் பதவி விலகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மோசமான தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் வியூகமும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

குறைந்த அளவிலேயே தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசாரங்கள் நடத்தியதே காங்கிரஸ் தோல்விக்குக் காரணமென அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருக்கத்தில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது தயக்கம் காட்டியது, சமாஜ் வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குறித்து கருத்து தெரிவித்தது, கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டது போன்ற காரணங்களாலும் வாக்குகள் பிரிந்து பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமைந்து விட்டது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.