புதுடெல்லி: மக்களவைப் பாதுகாப்பு மீறல் தொடர்பாக எதிர்க்கட்சியினர் சரமாரியாகக் கேள்வி கேட்ட நிலையில், அவை வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் இன்று (டிச.13) பாதுகாப்பு மீறல் நடந்துள்ள நிலையில், அத்துமீறி நுழைந்தவர்களில் ஒருவர், மைசூரு தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரையில் வந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நிலையில், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “இன்று 2001 டிசம்பர் 13 தான். அன்று நடந்த சம்பவத்தில் உயிரிழந்த பாதுகாவலர்களுக்கு இன்று காலை தான் அஞ்சலி செலுத்தினோம். அதற்குள் இப்படி ஒரு தாக்குதல் நடந்துள்ளது. தன்மையில் இது வேறு என்றாலும் கூட இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டாமா? சம்பவம் நடந்தபோது மக்களவை எம்.பி.க்கள்தான் அந்த நபர்களை துணிச்சலாகக் கையாண்டு மடக்கிப்பிடித்தனர். அவைக் காவலர்கள் எங்கே சென்றனர்” என்று வினவினார்.
கைதான இரண்டு இளைஞர்களில் ஒருவரின் அடையாளம் சாகர் சர்மா எனத் தெரியவந்துள்ளது. மற்றொருவர் பெங்களூரு விவேகனாந்தா பல்கலைக்கழத்தில் கணினி அறிவியல் பட்ட பொறியாளர் மனோரஞ்சன் தாஸ் எனத் தெரியவந்துள்ளது. வெளியே கைதான பெண்களின் பெயர் நீலம் (42), அமோல் ஷிண்டே (25) எனத் தெரியவந்துள்ளது.
விசிட்டர்ஸ் பாஸ் வழங்கப்படுவது எப்படி? – நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் பார்வையாளராக உள்ளே செல்வதற்கு குறிப்பிட்ட எம்பியின் பரிந்துரை கடிதம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கடிதத்தின் அடிப்படையிலேயே நுழைவுச் சீட்டு வழங்கப்படும். அவர்களுக்கு பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும் மேலும் அடையாள அட்டைகளை சரிபார்க்கப்படும் அதன்பிறகுதான் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கும் பரிந்துரை கடிதம் அளித்த மக்களவை உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில், சஹார் சர்மா என்பவருக்கு மைசூரு மக்களவையின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா பரிந்துரை கடிதம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒருவருக்கு பரிந்துரை கடிதம் வழங்கிய மக்களவை உறுப்பினர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இவர் மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் என்றும், இவர் ஒரு பொறியாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். போலீஸார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
யார் இந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா? – 2014ல் அரசியலில் காலடி எடுத்து வைத்த அவர், விரைவிலே பாஜக இளைஞர் பிரிவு தலைவராக ஆனார். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மைசூர் தொகுதியில் போட்டியிட்டு, தனது போட்டி வேட்பாளரை விட 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இந்திய பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளார். 2007-ல் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். இவரது மனைவி பெயர் அர்பிதா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சிம்ஹாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1,87,23,762 என்று ஓர் அறிக்கை கூறுகிறது.