‘அவுட் ஆப் சிலபஸ்’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் பார்வதி திருவோத்து.
தமிழில் ‘பூ’ படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து ‘மரியான்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘உத்தம வில்லன்’, ‘பெங்களூர் நாட்கள்’, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பார்வதி பேசியவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “ ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் யாருக்கும் எதையும் கொடுக்காது. அப்படிச் சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது. அதனால் என்ன லாபம்? சூப்பர் ஸ்டார் என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. அந்தப் பட்டம் இமேஜைக் கொடுக்கிறதா என்றும் எனக்குத் தெரியவில்லை.

சூப்பர் ஸ்டார் என்பதைவிட என்னை ஒரு சூப்பர் ஆக்டர் என்று சொன்னால் நான் மகிழ்ச்சியடைவேன். அப்படிப் பார்த்தால் மலையாளத்தில் ஃபகத் ஃபாசில், ஆசிப் அலி, ரீமா கல்லிங்கல் ஆகியோரை சூப்பர் ஆக்டர் என்று சொல்லலாம்” என்று கூறியிருக்கிறார்.