புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளா் சஞ்ஜய் சிங் தோ்வானதற்கு சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் விளையாட்டிலிருந்து விலகி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது சரியல்ல என்று ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கூறியுள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 20-ஆம் தேதி அறிவித்தார். இதுதொடர்பாக அவர், கண்ணீர் மல்க கூறும்போது, “நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷனின் வணிக கூட்டாளியும் அவரது நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் தலைவராக தேர்வாகி உள்ளார். இதனால் நான், மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். நாங்கள், ஒரு பெண் தலைவராக வரவேண்டும் என விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்றார்.
இதையடுத்து, இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா, தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்தார். பிரதமா் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் நேரில் சந்தித்து அதை திருப்பி அளிப்பதற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்ததை அடுத்து, பிரதமா் மோடியின் இல்லத்தில் உள்ள நடைபாதைப் பகுதியில் அந்த விருதையும், தனது கடிதத்தையும் பஜ்ரங் புனியா வைத்துவிட்டு திரும்பினார். இது பஜ்ரங் புனியாவின் தனிப்பட்ட முடிவு எனத் தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், அந்த முடிவை மாற்றிக் கொள்ளுமாறு அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தப் போவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, “மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷணின் உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் வீராங்கனைகள் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்கு உள்ளாவார்கள்” என்று முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, “கூட்டமைப்புத் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வந்துள்ளன. அதற்காக இது மாதிரியான பெரிய முடிவுகளை உணர்ச்சிவசப்பட்டு எடுப்பது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார். மல்யுத்த வீரர்களின் இந்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.