காமெடி நடிகர் போண்டா மணி நேற்றிரவு 10.30 மணியளவில் தனது இல்லத்தில் மரணமடைந்தார்.
தனித்துவமான உடல்மொழியாலும், அப்பாவித்தனமான நடிப்பாலும் பலரையும் கவர்ந்த காமெடி நடிகர் போண்டா மணி. குறிப்பாக வடிவேலு மற்றும் விவேக் உடனான இவரது காமெடிகள் மிகவும் பிரபலம். இந்நிலையில் சமீபத்தில் இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு வீடு திரும்பினார் போண்டா மணி. அவருக்குத் தமிழக அரசும், சில நடிகர்களும் உதவி செய்ததாக அவரே நம்மிடம் கூறியிருந்தார்.

அவருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார். அவரது மகளது கல்லூரி படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியிருந்தார். அவரது மகளும் தற்போது முதலாமாண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். போண்டா மணியின் மனைவி மாற்றுத்திறனாளி. காமெடி நிகழ்ச்சிகள் மூலம் குடும்பத்தை நகர்த்த வேண்டும் என்ற நிலை. அதனால் உடல்நிலை சரியில்லாத போதிலும் கிடைத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் போண்டா மணி.
சமீபத்தில் உடல்நிலை மிகவும் முடியாமல் போகவே, வீட்டிலேயே ஓய்விலிருந்திருக்கிறார். நேற்றிரவு 10.30 மணியளவில் அவருடைய வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது. அவரது மறைவு அவரது குடும்பத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. அவரது இறுதிச் சடங்கு சென்னையில் இன்று மாலை நடைபெற இருக்கிறது.

அவரது மறைவுக்குத் திரைத்துறையினரும், மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.