சென்னை: மிக்ஜாம் புயல், கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணெய்கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை, பாதிக்கப்பட்ட வர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட அதிகன மழை, வெள்ளப் பெருக்கின்போது, மணலி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய பெட்ரோலிய எண்ணெய் கழிவால் எண்ணூர் முகத்துவார பகுதிகளில் எண்ணெய் படலம் ஏற்பட்டது. இதனால்,அப்பகுதியில் உள்ள 8 மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் மீது எண்ணெய் கழிவுகள்படிந்ததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அப்பகுதிகளில் வீடுகளில் படிந்தஎண்ணெய் கழிவுகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
இதுதொடர்பாக தேசிய பசுமைதீர்ப்பாயத்தின் தென் மண்டலஅமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. அதில்,பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. எண்ணூர் முகத்துவார பகுதியில் நீரில் படந்துள்ள எண்ணெய் கசிவை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை: இதற்கிடையே, கடந்த 17-ம்தேதி எண்ணெய் கசிவால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தாழங்குப்பம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே,சென்னை மண்டலம் 1-ன் கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி மற்றும்காவல் துறை அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘‘மிக்ஜாம் புயலால்ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.6,000 நிவாரணத் தொகை, எண்ணூர் பகுதியில் உள்ள மீனவர் குடும்பங்களுக்கும் வழங்கப்படும். மேலும், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு கூடுதலாக ஒருகுடும்பத்துக்கு ரூ.12,500-ம், சேதமடைந்த படகுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். மீனவர்களின் வங்கிக் கணக்கு விவரம் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது. நிவாரணத் தொகை விரைவில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்’’ என்று கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி உறுதி அளித்தார். இதையடுத்து, மீனவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், நிவாரணம் தொடர்பாக தமிழக அரசு நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த5-ம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவை அகற்ற தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த எண்ணெய் கசிவால், காட்டுக்குப்பம். சிவன்படைக்குப்பம். எண்ணூர் குப்பம் முகத்துவாரக்குப்பம். தாழங்குப்பம். நெட்டுக்குப்பம். வ.உ.சி நகர். உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணிமுத்து நகர் ஆகிய கடலோரமீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.
வாழ்வாதாரம் பாதிப்பு: மேலும் இக்கிராமங்களை சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல இயலாததால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்ஏற்கெனவே அறிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் வரவு.. இதைத் தொடர்ந்து கூடுதலாக, எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.12,500 வீதமும், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்யபடகு ஒன்றுக்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் ரூ.3 கோடி தமிழக அரசால் ஒப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கில் இந்த நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.5.02 கோடி நிவாரண தொகை வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரண தொகை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
அந்த வகையில், மிக்ஜாம்புயல், கனமழையால் ஏற்பட்டஎண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68கோடி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.