பாஜக 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த அடுத்த சில மாதங்களில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம், அயோத்தி ராமர் கோயில், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஆகிய மூன்றைக் கையிலெடுத்தது. அதில், ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ பா.ஜ.க அதிரடியாக நீக்கியது. அதற்கெதிரான வழக்கில், பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லும் என கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. அதற்கடுத்தபடியாக இன்னும் முழுமையாகக் கட்டுமானப் பணிகள் முடியாத அயோத்தி ராமர் கோயிலை ஜனவரி 22-ம் தேதி திறக்க பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது.
தற்போது, கடந்த சில வாரங்களாகக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாகக் கூறிவருகிறார். மேலும், வரும் மார்ச் மாதத்துக்குள் சி.ஏ.ஏ-வின் இறுதி வரைவு நடைமுறைக்கு வருவதற்குத் தயாராக இருக்கும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்த மூன்றும், இன்னும் லோக் சபா தேர்தலுக்கு நான்கைந்து மாதங்களே இருக்கும் சூழலில் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துகொண்டிருக்கிறது.
2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த இந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா 2019-ல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்தாலும், இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இதை நடைமுறைப் படுத்துவதற்கான விதிகளை வகுப்பதில் சிக்கல் இருப்பதால், அதற்கான கால அவகாசத்தை நீட்டித்துக்கொண்டே வரும் பா.ஜ.க அரசு, தற்போது லோக் சபா தேர்தல் நெருங்க நெருங்க அந்தப் பணிகளில் வேகமெடுத்து வருகிறது. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த மண்ணின் சட்டம் என்றும், இதை அமல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அமித் ஷா மீண்டும் உறுதியாகக் கூறியிருக்கிறார்.
மேற்கு வாங்க மாநிலத்திலுள்ள தேசிய நூலகத்தில் நேற்று நடைபெற்ற, மாநில பா.ஜ.க-வின் சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவினர்கள் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “வரும் லோக் சபா தேர்தலில் மாநிலத்திலுள்ள 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றும். அதோடு, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆட்சியமைக்க நாம் உழைக்க வேண்டும். ஊடுருவல், பசு கடத்தல் போன்றவற்றுக்கு பா.ஜ.க அரசு முடிவுகட்டி, மதரீதியாகத் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ மூலம் குடியுரிமை வழங்கும். சி.ஏ.ஏ விவகாரத்தில் மக்களையும், அகதிகளையும் மம்தா பானர்ஜி தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். இருப்பினும், குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த மண்ணின் சட்டம் என்பதையும், யாராலும் அதைத் தடுக்க முடியாது என்பதையும் நான் தெளிவாகக் கூறிவிடுகிறேன். அது எங்களின் பொறுப்பு” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.