சமீபத்தில் நடந்து முடித்த உலகக்கோப்பைத் தொடரில் முகமது ஷமி பந்து வீச்சில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார். தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் முகமது ஷமியும் இடம் பெற்றிருந்தார். ஆனால் கணுக்கால் காயம் காரணமாக அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக முதல் போட்டியில் பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் சரியாக விளையாடவில்லை.

இந்நிலையில் முகமது ஷமியின் காயம் குறித்து அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது, “ஷமிக்கு நீண்டகாலமாக இடது குதிகாலில் பிரச்னை உள்ளது. அவர் உலகக் கோப்பையின் போது வலிக்காக ஊசி போட்டுக் கொண்டுதான் விளையாடினார் என்பதும் பல போட்டிகளில் வலியுடன்தான் விளையாடினார் என்பதும் இங்குப் பலருக்குத் தெரியாது. வயதாக வயதாக ஒவ்வொரு காயத்திலிருந்தும் வலியிலிருந்தும் மீள்வது சிரமமாகவே இருக்கும்” என்றனர்.
முதலில் சில போட்டிகளில் வாய்ப்பே கிடைக்காமல் ஷமி பென்ச்சில்தான் வைக்கப்பட்டிருந்தார். ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்ட பிறகுதான் ஷமியை பிளேயிங் லெவனிலேயே எடுத்தார்கள். தாமதமாக வாய்ப்பு கிடைத்திருந்தாலும் கிடைத்த வாய்ப்பில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்களிப்பைச் செய்திருந்தார்.

2015-ம் ஆண்டு உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் நடந்திருந்தது. அந்த உலகக்கோப்பையிலும் ஷமி காயத்துடன்தான் ஆடியிருந்தார். ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் வலி நிவாரண ஊசிகளை எடுத்துக் கொண்டுதான் ஆடியிருக்கிறார். முக்கியமான அரையிறுதிப் போட்டியில் ஷமியால் பந்துவீசவே முடியவில்லையாம். அணியின் கேப்டனாக இருந்த தோனிதான் ஷமிக்கு நம்பிக்கையளித்துப் பந்துவீச வைத்ததாக ஷமியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.