ஜப்பான் பூகம்பம் – கவலை தெரிவித்த ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர்

புத்தாண்டு தினமான நேற்று ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பூகம்பத்தால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து தெலுங்கு இயக்குனரான ராஜமவுலி, நடிகர் ஜுனியர் என்டிஆர் தங்களது கவலைகளை பகிர்ந்துள்ளனர்.

“ஜப்பானை நிலநடுக்கம் கடுமையாகத் தாக்கியது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. எங்களது இதயங்களில் அந்தநாட்டிற்கு தனி இடமுண்டு. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவர் மீது எனது எண்ணங்கள் உள்ளது,” என்று ராஜமவுலி பதிவிட்டுள்ளார்.

ஜுனியர் என்டிஆர் அவரது பதிவில், “ஜப்பானிலிருந்து இன்று வீடு திரும்பியதும் அங்கு நிலநடுக்கங்கள் தாக்கியது கடும் அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த வாரம் முழுவதும் நான் அங்குதான் இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வருத்தம். மக்களின் சகிப்புத் தன்மை பற்றியும், அவர்கள் விரைவில் மீள்வார்கள் என்றும் நம்புகிறேன், வலுவாக இருங்கள், ஜப்பான்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் ஜப்பான் நாட்டில் நன்றாக ஓடி அதிக வசூலைக் குவித்து சாதனை புரிந்தது. அதன் காரணமாக ஜப்பான் நிலநடுக்க பாதிப்பு குறித்து தங்களது கவலைகளை வெளியிட்டுள்ளனர்.

அதே சமயம் அவர்களது பக்கத்து மாநிலமான தமிழகத்தில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது குறித்து வேறு மொழி நடிகர்கள் யாரும் தங்களது கவலைகளைப் பகிரவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. இங்கும் அவர்களது படங்கள் நன்றாகத்தானே ஓடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.