மூணாறு:சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் நெருங்குவதால் அதற்காக பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை ஜன.12க்குள் முடிக்குமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கு இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டார்.
சபரிமலையில் ஜன.15 மகரஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்காக கேரளா இடுக்கி மாவட்டத்தில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஷீபாஜார்ஜ் காணொலி காட்சி மூலம் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். புல்மேடு, பாஞ்சாலிமேடு, பருந்து பாறை ஆகிய பகுதிகளில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு 1400 போலீசார் பணியில் ஈடுபடுவர்.
பாதுகாப்பு தொடர்பாக சோதனை, கண்காணிப்பு கடுமையாக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக குமுளி அரசு பஸ் டிப்போவில் இருந்து வல்லக்கடவு, கோழிக்கானம் வழியில் 65 சர்வீஸ்கள் இயக்கப்படும்.
அவசர தேவைக்கு ஆறு மையங்களில் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் நிறுத்தப்படுவர். புல்மேடு முதல் கோழிக்கானம் வரை 14 இடங்களில் குடிநீர் வாரியத்தினர் தண்ணீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். புல்மேடு, பருந்து பாறை ஆகிய பகுதியில் பொதுப்பணி துறையினர் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
கோழிக்கானம் முதல் புல்மேடு வரை 14 கி.மீ., தூரம் வருவாய்துறையினர் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மருத்துவ குழு, ஆம்புலன்ஸ் சேவை வசதிகள் செய்ய வேண்டும். அனைத்து ஏற்பாடுகளையும் ஜன.12க்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement