நம்மில் பலர் பணி ஓய்வுக்குப் பிறகு சுமார் 15, 20, 25, 30 ஆண்டுகள் எந்த ஒரு வருமானமும் இல்லாமல் வாழ வேண்டியிருக்கிறது. ஒரு பெருந்தொகையை சேர்த்து வைத்திருந்தால்தான் ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாக செலவிட முடியும்.
ஓய்வுக் காலத்துக்கு ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான முக்கியமான ஏழு காரணங்களை இங்கே பார்ப்போம்.
1. ஆயுள் அதிகரிப்பு!
போதிய மருத்துவ வசதி இல்லாத 1960 -ம் ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள் 42 வயதாக இருந்தது. இது நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கம், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இப்போது சுமார் 72 வயதாக அதிகரித்துள்ளது. வருங்காலத்தில் 80, 85 என உயர அதிக வாய்ப்புள்ளது. ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு நீண்ட காலம் உயிர் வாழ்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிக தொகுப்பு நிதி இருக்க வேண்டும்.
2. ஓய்வுக் காலத்தில் கடன் கிடைக்காது..!
ஒருவர் வேலை பார்க்கும் காலத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தேடித் தேடி கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன், கார் கடன், வீட்டுக் கடன் என வித விதமாக கடன் கொடுக்கும்.
இதுவே பணி ஓய்வு பெற்று வேலையில் இல்லை என்பதால் யாரும் கடன் கொடுக்க முன் வருவதில்லை.

3. அரசு பென்ஷன் இல்லை..!
இந்தியாவில் 2004-க்கு பிறகு மத்திய, மாநில அரசுப் பணியில் சேருபவர்களுக்கு பென்ஷன் கிடையாது. 2014-க்கு பிறகு தனியார் நிறுவனப் பணிகளில் சேருபவர் பணியாளர் பிராவிடெண்ட் ஃபண்ட்-ன் குடும்ப ஓய்வூதியமும் கிடையாது.
4. பி.எஃப் தொகை போதுமானதாக இல்லை…!
இதற்கு முன் பெரும்பாலான நிறுவனங்களில் பணியாளர்கள் வாங்கும் சம்பளத்தில் அதாவது அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% பணியாளர் சேமநல நிதியாக (EPF) பிடித்தன. இதனால், உறுப்பினர் கணக்கில் அதிக தொகை சேர்ந்தது. தற்போது சட்டப்படியான சம்பள உச்ச வரம்பு ரூ.15,000-ல் 12% அதாவது ரூ.1,800 என்கிற கணக்கில் இ.பி.எஃப் பிடிக்கப்படுவதால், பெரிய தொகையாக சேருவதில்லை.

5. விலைவாசி உயர்வு
பணவீக்க விகிதம் என்கிற விலைவாசி மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், செலவுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. இன்றைக்கு 15, 20 ஆண்டுகளுக்கு பணி ஓய்வுப் பெற்றவர்கள் மாற்றம் ரூ.3000, ரூ.5000-ஐ வைத்தே மாதச் செலவுகளை சுலபமாக சமாளித்தார்கள் ஆனால், இன்றைக்கு ரூ.25000, ரூ.30000 இருந்தாலே செலவுகளை சமாளிப்பது கடினமாக இருக்கிறது. இன்னும் 10, 15 ஆண்டுகள் கழித்து மாதம் ரூ.50000, ரூ.60000 இருந்தால்தான் செலவுகளை சமாளிக்க முடியும்.
6. தனிக் குடும்பங்கள் அதிகரிப்பு
அந்தக் காலத்தில் நம் தாத்தா, பாட்டி, நம் அப்பா, அவர்களுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா எல்லாம் ஒரே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். ஒரே வீடு, ஒரே சமையல் என செலவுகளை குறைத்தார்கள். இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை; கல்யாணம் ஆனவுடனே தனிக் குடித்தனம்தான். ஒருவரின் பணி ஓய்வுக் காலத்தில் தனியாக வசிக்க வேண்டி இருக்கிறது; செலவுகளையும் தனியாக செய்ய வேண்டி இருக்கிறது. எனவே, பணி ஓய்வுக் காலத்துக்கு என தனியே சேமித்து வருவது அவசியமாகிறது.
7. அதிக மருத்துவச் செலவு
நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது. பொதுவான விலை உயர்வு ஆண்டுக்கு 6-7% ஆக இருந்தால் மருத்துவ விலைவாசி உயர்வு 10-12 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன் மருத்துவருக்கான கட்டணம் ரூ.50, ரூ.100 என்பதாக இருந்தது. இன்றைக்கு அது குறைந்தது ரூ.300, ரூ.500 என்பதாக அதிகரித்துள்ளது. இதேபோல் மருத்துவமனை செலவுகளும் மிகவும் அதிகரித்துள்ளது.

வயதாகும் போது நீரிழிவு, ரத்த அழுத்தப் பாதிப்பு வந்துவிடுகிறது. இவற்றுக்கான மருந்து செலவு அதிகமாக உள்ளது. மேலும் சிறு நீரக பாதிப்பு, இருதய பாதிப்பு போன்ற சிசிச்சைகளுக்கு ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் என இருக்கிறது. இந்தச் சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும். வயதானவர்களுக்கு அதிக பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக அதிக தொகையை சேர்த்து வைப்பது அவசியமாகிறது.
மேற்கண்ட காரணங்களால் ஒருவர் பணி ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்து வருவது அவசியமாக உள்ளது.
அடுத்த வாரம் – பணவீக்கத்தின் பெரும் பாதிப்பு.. பற்றி பார்ப்போம்.