'இந்தியாவில் உள்ள அழகான இடங்களை உலகிற்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்' – மத்திய மந்திரி மீனாட்சி லேகி

புதுடெல்லி,

சமீபத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார்.

இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், “லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். அந்த மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்” என தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த பதிவு தொடர்பாக மாலத்தீவு அரசின் மந்திரிகள் சிலர் கேலி செய்யும் வகையிலும், இந்தியர்கள் மீது இனவெறியை காட்டும் வகையிலும் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்தனர். இதற்கு இந்தியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மாலத்திவுக்கான விமான டிக்கெட் முன்பதிவுகளை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ரத்து செய்ததாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே மந்திரிகள் கூறியது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாலத்தீவு அரசு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் இந்தியர்கள் குறித்து விமர்சன பதிவுகளை வெளியிட்ட 3 மந்திரிகளை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்வதை விட இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களில் இந்தியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என மத்திய மந்திரி மீனாட்சி லேகி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“பிரதமர் நரேந்திர மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் மூலம், இந்தியாவில் உள்ள அழகான இடங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஒருபுறம் மாலத்தீவு இருக்கிறது என்றால், நம்மிடம் லட்சத்தீவு இருக்கிறது. அதுவும் நமக்கு அருகிலேயே இருக்கிறது.

மேலும் நமது நாட்டில் அந்தமான், இமாச்சல் மற்றும் லே-லடாக் ஆகியவை உள்ளன. இந்தியர்கள் உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள். இதற்காகவே இந்தியர்கள் நன்கு மதிக்கப்படுகிறார்கள். எனவே, நமது நாட்டைப் புரிந்து கொள்ள, சரியான கண்ணோட்டத்தில் இந்தியாவைப் பார்க்க வேண்டும்.

மாலத்தீவு தலைவர்கள் என்ன சொன்னார்கள் என்பதப் பற்றி எனக்கு கவலை இல்லை. நமது வரலாறு மற்றும் செயல்கள் குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும். இந்தியர்கள் தங்கள் தாய்நாட்டில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். வெளிநாடுகளுக்குப் பறப்பதை விட நமது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.”

இவ்வாறு மீனாட்சி லேகி தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.