கடலூர்: கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் மழை காரணமாக இன்று (திங்கட்கிழமை, ஜன.8) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பொழிவு பதிவாகி உள்ளது. இதில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மழை பொழிந்து வருகிறது. நள்ளிரவு முழுவதும் மழை நீடித்த நிலையில் இன்று திங்கட்கிழமை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் அதிகாலை 2.30 மணி நேர நிலவரப்படி சுமார் 82 மில்லிமீட்டர் மழை பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 10-ம் தேதி வரை இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மட்டுமல்லாது நாகை, புதுச்சேரி, காரைக்கால், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை பதிவாகி உள்ளது.