Doctor Vikatan: கடந்த சில மாதங்களாக நான் சிறுதானிய உணவுக்கு மாறிவிட்டேன். குறிப்பாக வெள்ளை அரிசியைத் தவிர்த்து வரகு, சாமை அரிசி சாதம்தான் சாப்பிடுகிறேன். இதனால் என் உடல் எடை வெகுவாக குறைந்துவிட்டது. சிறுதானிய உணவுகளால் எடை குறையுமா…. எடை குறையத் தேவையில்லாதவர்கள் சிறுதானியங்கள் எடுத்துக்கொள்ளும்போது என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

சிறுதானிய உணவுகளை உண்பதால் உடல் எடை குறைந்ததாகச் சொல்வது உண்மை தான். சாதாரண அரிசி வகைகளுக்கும் பாரம்பர்ய அரிசி வகைகளுக்கும் கலோரி அளவுகளில் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை.
இரண்டிலும் 100 கிராமுக்கு 320 முதல் 340 கலோரிகள் இருக்கும். ஆனால் சிறுதானியங்களிலும் பாரம்பர்ய அரிசிகளிலும் புரதச்சத்தின் அளவு மிக அதிகம். புரதச்சத்து அதிகமிருப்பதால் வழக்கமான அரிசி உணவுகளைவிட குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டுவிடுகிறது.

தவிர, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி வகைகளில் நார்ச்சத்து மற்றும் பிற நுண் ஊட்டச்சத்துகள் அதிகமிருப்பதால் குறைவாகச் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்துவிடுகிறது. அதன் விளைவாக உடல் எடையும் குறைகிறது. எடைக்குறைப்புக்காக இவற்றை எடுத்துக்கொள்வோர், தீவிர உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவார்கள்.
அதுவே எடை குறையத் தேவையில்லை என்போர், உணவு இடைவேளைகளில் பழங்கள், ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள், நட்ஸ், சீட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதைத் தொடர்ச்சியாகப் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்க வேண்டும். என்றோ ஒருநாள் கல்யாணம், விருந்து, விசேஷங்களில் அதிகம் சாப்பிடுவதில் தவறில்லை.

அதை அடிக்கடி பழக்கப்படுத்திக் கொள்ளாமல், பேலன்ஸ்டு உணவாகச் சாப்பிட வேண்டும். பாரம்பர்ய அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளை உண்பதால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். எலும்புகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடல் சுறுசுறுப்பாக, ஆக்டிவ்வாக இருக்கும். உடற்பயிற்சிகள் செய்யவும் ஒத்துழைக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.