வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி குர்பந்த சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்ட நிகில்குப்தா மீதான கொலைக் குற்றச்சாட்டின் ஆதாரத்தை காட்ட அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதியும், ‛நீதிக்கான சீக்கியர் அமைப்பின்’ தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுனை, நியூயார்க்கில் வைத்து கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் இணைந்து முயன்றதாகவும், அதற்காக ஒருஆளை வாடகைக்கு அமர்த்தியதாகவும் நிகில் குப்தா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், நிகிலால் அமர்த்தப்பட்ட நபர், அமெரிக்க மத்திய அமைப்பின் முகவராக மாறினார். இதனையடுத்து செக் குடியரசின் பராக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிகில் குப்தா அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி நிகில் குப்தா தரப்பு வழக்கறிஞர், குற்றச்சாட்டுகள் குறித்து கண்டறியப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் எனவும், இதற்கு அமெரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், உத்தரவின் தேதியில் இருந்து மூன்று நாட்களுக்குள் தகவல்கள் குறித்த கோரிக்கைக்கு பதிலளிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது.
ஆனால், நிகில் குப்தாவை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவரது வழக்கறிஞர்களிடம் ஆதாரங்களை காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement