மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டில் அரசு ஊழியர்கள், காவலர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளக்குறைப்பு செய்யப்போவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து போலீஸார் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கலவரம் வெடித்தது. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய கண்டத்தில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டில், அரசு ஊழியர்கள், காவலர்கள் பொதுப்பணித்துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளக்குறைப்பு செய்யப்போவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து போலீஸார் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அப்பகுதி மக்கள் அங்கிருந்த கடைகளை சூறையாடினார்கள். அதோடு சில பொருட்களையும் திருடிச்சென்றனர். இதையடுத்து கலவரம் வன்முறையாக மாறியது. அதைத் தொடர்ந்து, அரசாங்கம் சார்பில் இது குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. சம்பளக்குறைப்பு குறித்து தவறான செய்தி வெளியானதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் உள்ள கடைகள் மற்றும் பிற கட்டிடங்கள் தீவைக்கப்பட்டன. மேலும் கடைகளில் உள்ள பொருட்களை மக்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வன்முறைக் கலவரத்தின் போது குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் நடந்த கலவரத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், லே நகரில் 7 பேர் உயிரிழந்ததாகவும் பப்புவா நியூ கினியா காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப் இது குறித்து, “பொதுமக்கள், சொத்துக்களைக் கொள்ளையடிப்பதையும், சேதப்படுத்துவதையும் நிறுத்து வேண்டும். ஒரு நாட்டில் இது மாதிரியான விசயம் நடப்பதை அனுமதிக்க முடியாது. நட்டத்தை சந்தித்த வணிகங்களுக்கு அரசாங்கம் சார்பில் நிவாரணம் வழங்க வழிவகை செய்யப்படும்” என்றார்.
பப்புவா நியூ கினியா அதிக மக்கள்தொகை கொண்ட பசிபிக் தீவு நாடாகும். அதிகளவில் கனிம வளங்கள் மற்றும் பிற வளங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.