அயோத்தி ராமர் கோயில் சுற்றுலாவுக்கு ஜன. 27-ம் தேதி முதல் சங் பரிவார் ஏற்பாடு

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்பின்பு, நாடு முழுவதும் உள்ள மக்கள் அயோத்தி சுற்றுலா வருவதற்கான ஏற்பாடுகளை சங் பரிவார் செய்கிறது.

ராமர் கோயில் பற்றிய பரபரப்பு கும்பாபிஷேகத்துடன் முடிந்து விடாமல், அதற்கு பின்பு தொடர்வதற்கான திட்டங்களை செய்ய சங் பரிவார் திட்டமிட்டுள்ளது. ஜனவரி 27-ம் தேதி முதல் பிப்ரவரி 22-ம் தேதி வரை ராமர் கோயிலை பார்வையிட நாடு முழுவதும் இருந்து 44 சிறப்பு ரயில்கள் அயோத்திக்கு இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்களில் வரும் மக்களுக்கு அயோத்தியை சுற்றிகாட்டுவதற்கான ஏற்பாடுகளை சங் பரிவார் செய்கிறது. இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நன்கொடை அளித்தவர்கள் உட்பட சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் அயோத்தி வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்கொடை அளித்தவர்கள் அனைவரையும் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு அழைக்க முடியவில்லை. இதனால் கோயில் திறக்கப்பட்ட பின்பு, அவர்கள் அயோத்தி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் 45 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் 1,500 முதல் 2,500 பக்தர்கள் அயோத்தி வரவுள்ளனர். அவர்களுக்கு தேவையான தங்கும் வசதிகள், உணவு, தரிசன வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் நாடு முழுவதிலும் இருந்து வரும் விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தப் பணியை நன்கொடையாளர்கள் செய்யும் நன்றியாக கருதுகிறோம்.

தென்மாநில மக்கள் உட்பட இந்தி தெரியாத மக்கள், அயோத்தி வரும்போது, அவர்களுக்கு எந்தவித அசெளகரியமும் ஏற்படாதவகையில் வழிநடத்துவதற்கான ஏற்பாடுகளை சங் பரிவார் செய்துள்ளது. அந்தந்த மாநில மொழி பேசும் தொண்டர்கள், முன்கூட்டியே வரவழைக்கப்பட்டு சுற்றுலா வரும் குழுவினருடன் இணைக்கப்படுவர். இவ்வாறு அலோக் குமார் தெரிவித்தார்.

பல மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் டென்ட் சிட்டியில் 2 நாட்கள் தங்குவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஎச்பி செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவித்துள்ளார். முதல் குழு பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்தும், அடுத்து டெல்லி, ஜார்கண்ட் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அயோத்தி வரவுள்ளனர்.

அதோடு ஜனவரி 25-ம் தேதிக்குப்பின் மார்ச் மாதம் வரை ஒவ்வொரு மக்களவை தொகுதியிலிருந்தும் சுமார் 10,000 பேரை அயோத்திக்கு அழைத்து வர பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.