அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் அனைத்தும் சாஸ்த்திரப்படியே நடத்தப்படுவதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையில், கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், “அனைத்தும் சாஸ்த்திரப் படியே நடக்கின்றன. விழாவில் பங்கேற்காததற்காக அவர்கள்(காங்கிரஸ் தலைவர்கள்) ஏதேதோ சொல்கிறார்கள்” என கூறினார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தக்கூடாது என்றும் சாஸ்த்திரப் படி கும்பாபிஷேகம் நடைபெறாது என்பதால் தாங்கள் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் சங்கராச்சாரியார்கள் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், “சங்கராச்சாரியார்களின் கருத்து குறித்தும் அவர்களின் எண்ணம் குறித்தும் நாங்கள் கேள்வி எழுப்ப மாட்டோம். எனவே, அது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது” என தெரிவித்தார்.
ராமர் கோயில் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், “ராஜநீதி தர்மநீதி என இரண்டு இருக்கிறது. ராமர் கோயிலை அவர்கள்(பாஜக) கட்டி இருக்கிறார்கள். அதற்கான ஆசீர்வாதத்தை இன்று அவர்கள் பெறுகிறார்கள். இது ராஜநீதி கிடையாது; ஆனால் தர்மநீதி” என குறிப்பிட்டார். குழந்தை ராமர் சிலையை அவர் பிறந்த இடத்தில் நிறுவுவதற்கு இதற்கு முன் வேறு அரசியல் கட்சி ஏதேனும் முயன்றதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இதற்கு முன் அப்படி யாரும் முயற்சிக்கவில்லை” என கூறினார்.
மேற்கு வங்கத்தில் சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆச்சாரிய சத்யேந்திர தாஸ், “சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு காவி வண்ணத்தைக் கண்டாலே கோபம் வருகிறது. மம்தா பானர்ஜிக்கு சிலர் மும்தாஜ் கான் என பெயர் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இதற்கு முன்பும் ராம நவமி ஊர்வலத்தின்போதும், பிற ஆன்மீக ஊர்வலங்களின்போதும் தாக்குதல் நடந்திருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.