பாலமேடு: மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள பாலமேடு கிராமத்தில் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பிறகு போட்டி தொடங்கியது. சுமார் 1,000 காளைகள் மற்றும் 700 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில் நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து இன்றைய தினம் பாலமேட்டில் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் உரிய முறையில் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை முறைப்படி திட்டமிட்டு ஒருங்கிணைத்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மது அருந்திவிட்டு வரும் வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
போலீஸார் மட்டுமல்லாது வீரர்கள் காயமடைந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினரும் களத்தில் முகாமிட்டுள்ளனர். அதேபோல கால்நடை மருத்துவக் குழுவினரும் களத்தில் உள்ளனர். இதில் முதல் இடம் பிடிக்கும் காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசு அளிக்கப்படுகிறது. இது தவிர போட்டியில் வெற்றி பெரும் வீரர் மற்றும் காளைக்கு தங்கக் காசு, சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.