அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்த பாடகர் சித்ராவின் பதிவுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பிரபல பாடகர் சித்ரா வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரி வீடியோவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற புகழ்பெற்ற பாடகியான கே.எஸ்.சித்ரா, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ம் தேதி நண்பகல் 12.20 மணிக்கு அனைவரும் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்றும், அன்றைய தினம் மாலையில் வீட்டில் 5 அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்த வீடியோவின் இறுதியில், ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ என கூறி முடித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சித்ராவை ஒரு பிரிவினர் விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ மூலம் சித்ரா ஒரு குறிப்பிட்ட அரசியலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேநேரத்தில், அவருக்கு ஆதரவாகவும் பலர் சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் சித்ரா விமர்சிக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன், “ராமர் கோயில் திறப்பு விழாவின்போது ராம மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்; வீடுகளில் விளக்கேற்க வேண்டும் என சித்ரா கூறியது குற்றமா? கேரளாவில் ராம மந்திரத்தை உச்சரிப்பது குற்றம் என இருக்கிறதா? இதுபோன்று சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கேரள காவல் துறை ஏன் அமைதியாக இருக்கிறது?

பாடகர் சித்ராவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும். அவர்கள்தான் சபரிமலை ஐயப்பன் கோயிலை, அதன் பாரம்பரியத்தை அழிக்க முயன்றவர்கள். துரதிருஷ்டவசமாக இத்தகைய சக்திகளுக்கு கேரளாவின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஊக்கமளிப்பவைகளாக உள்ளன. கேரளா தலிபான்மயமாவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கருத்து சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.