தமிழகத்தில் நடப்பாண்டில் மத்திய அரசு உதவியுடன், 800 நுாலகங்களுக்கு,130 கோடி ரூபாய் மதிப்பில் புது கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள, 32 மாவட்ட மைய நுாலக கட்டுப்பாட்டில், 4,658 நுாலகங்கள் செயல்படுகின்றன. இதில் முதல்கட்டமாக, 800 நுாலகங்களுக்கு புது கட்டடம் கட்டப்பட உள்ளது.
இதுவரை சொந்த கட்டடம் இல்லாத நுாலகத்துக்கு முன்னுரிமை கொடுத்து புது கட்டடம் கட்டப்பட உள்ளதோடு ஏற்கனவே சொந்த கட்டடத்தில் இயங்கும் நுாலகத்தில், இட வசதி இருந்தால் கூடுதலாக புது கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு மத்திய கல்வி அமைச்கத்திடம் பெறப்பட்ட கடன், 100 கோடி ரூபாய் தயாராக உள்ளதால் வரும் மார்ச்சில் கட்டுமானப்பணி தொடங்க உள்ளது.
இதுகுறித்து பொது நுாலகத்துறைத்துறை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் தியாகராஜன் கூறியதாவது:
மத்திய அரசு கடனுதவி நடப்பாண்டு, 200 கோடி ரூபாய் அறிவித்து முதல்கட்டமாக, 100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொது நுாலகத்துறை பங்களிப்பு, 30 சதவீதம் சேர்த்து, 130 கோடி ரூபாய் மதிப்பில் பணி தொடங்கப்பட உள்ளது. 500 சதுரடிஅளவில் கட்டடம் அமையும்.
அடுத்த இரண்டொரு மாதத்தில் மேலும், 100 கோடி ரூபாய் விடுவித்ததும் நுாலகத்துறை நிதியை சேர்த்து மொத்தம், 260 கோடி ரூபாய் மதிப்பில், 800 நுாலக கட்டுமானப்பணி நிறைவு செய்யப்படும்.
அடுத்த நிதியாண்டில், 300 கோடி ரூபாய் கடனுதவி பெறப்பட்டு அத்துடன் நுாலக பங்களிப்பு, 90 கோடி ரூபாய் ஒதுக்கி, 1,200 நுாலகங்களுக்கு புது கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் மத்திய அரசு நிதி, 500 கோடி ரூபாய், நுாலகத்துறை பங்களிப்பு, 150 கோடி ரூபாய் என, 650 கோடி ரூபாய் மதிப்பில், 2,000 நுாலகங்களுக்குபுது கட்டடம், 2 ஆண்டில் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, நுாலக நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
நுாலக வரி வசூல் மூலம் மத்திய அரசு கடனை வட்டியின்றி திருப்பி செலுத்தி ஈடு செய்யப்படும். இத்தகைய நடவடிக்கை மூலம் பொது நுாலகத்துறை சொந்த கட்டடத்தில் இயங்குவது தன்னிறைவு அடைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்