`மார்க் ஆண்டனி’க்குப் பிறகு விஷால் நடித்து வரும் `ரத்னம்’. இயக்குநர் ஹரி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.
‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பின் ஹரி – விஷால் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ரத்னம்’. இப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் மேனன், முரளி சர்மா, பிரியா பவானி சங்கர் எனப் பலரும் நடித்து வருகிறார்கள். தேவிஶ்ரீபிரசாத் இசையமைப்பில், ‘மைனா’ சுகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கூட சமுத்திரக்கனி, கௌதம் மேனன் காம்பினேஷனில் படப்பிடிப்பு நடந்த போது, இயக்குநர் ஹரியுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷால், ‘அடுத்த வருடம் இந்தக் கூட்டணியில் இயக்குநராக நானுமிருப்பேன்’ எனத் தெரிவித்திருந்தார். சென்னையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு காரைக்குடி, வேலூர், திருப்பதி ஆகிய இடங்களில் நடந்தது.

இயக்குநர் ஹரி தனது முந்தைய படங்களை விட, இதில் ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்கிறார்கள். அதனால்தான் பீட்டர் ஹெயின், கனல் கண்ணன், திலிப் சுப்பராயன் என ஒவ்வொரு ஃபைட்டையும் ஒவ்வொரு மாஸ்டர்கள் வைத்து எடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியில் சேஸிங் காட்சி ஒன்றைப் படமாக்க நினைத்தார்கள். சில சூழல்களால் அந்தக் காட்சியைச் சமீபத்தில் திருப்பதியில் எடுத்திருந்தனர். இப்போது சென்னையில் அரங்கம் அமைத்து பிரியா பவானி சங்கர் காம்பினேஷனில் டூயட் ஒன்றைப் படமாக்கி வருகிறார்கள். இந்தப் பாடல் ஷூட்டோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. படத்தைக் கோடை விடுமுறையில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை முடித்துவிட்டு, ஏப்ரலில் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு வருகிறார். ஏற்கெனவே ஒரு சில வாரங்கள் படப்பிடிப்பு நடந்திருக்கும் நிலையில், இப்போது மீண்டும் அதனைத் தொடர்கிறார். ‘துப்பறிவாளன் 2’ படத்தை லண்டனில் எடுக்க உள்ளதாகவும் பேச்சு இருக்கிறது. இதனை முடித்துவிட்டே அடுத்த படத்தில் கமிட்டாக நினைக்கிறார் விஷால்.
சமீபத்தில் ஹிட் கொடுத்த இயக்குநர்கள் சிலர், விஷாலிடம் கதை சொல்ல விரும்பியும், அவர் அவர்களை ஹோல்டில் வைத்துள்ளார். ‘மார்க் ஆண்டனி’க்கு முன் கதையில் கவனம் செலுத்தாமல் எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்தியதால், சறுக்கல்கள் ஆனது என்பதை மனதில் வைத்து, இப்போது தெளிவாகவே கதைகள் கேட்டு வருகிறார் விஷால் என்கிறார்கள்.