Cricket Rules: ரோஹித் 2ஆவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தது தப்பா? – ரூல்ஸ் சொல்வது என்ன?

Super Over Rules In Tamil: இந்தியா – ஆப்கானிஸ்தான் (IND vs AFG) அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது. மூன்று போட்டிகளையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி (Team India) வென்று தொடரை வைட்வாஷ் செய்த து. முதலிரு போட்டிகளையும் எளிதாக இந்திய அணி வென்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் கடும் போராட்டத்திற்கு பின்னரே வெற்றியை பெற்றது. 

குழப்பங்களும் சர்ச்சைகளும்…

ஐபிஎல் பாணி ஆட்டங்கள் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் கடும் போராட்டம் என்ற வார்த்தையே சாதரணமாகிவிட்டது. இருப்பினும், சர்வதேச அளவில் இரண்டு சூப்பர் ஓவர் வரை சென்ற முதல் டி2 போட்டியாக நேற்றைய இந்தியா – ஆப்கானிஸ்தான் மூன்றாவது ஆட்டம் அமைந்தது. இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. 

அந்த வகையில், பல குழப்பங்களும் சர்ச்சைகளும் சூப்பர் ஓவர் நடைபெற்றது எனலாம். முதல் சூப்பர் ஓவரில் ஆப்கன் அணி பேட்டிங் பிடிக்க, இந்திய அணியில் முகேஷ் குமார் பந்துவீசினார். அதில் கடைசி பந்தில் இந்திய வீரர் அடித்த த்ரோ நபியின் கால்பட்டு ஓவர் த்ரோவானது. அப்போது ஆப்கன் பேட்டர்கள் நபி – குர்பாஸ் ஆகியோர் ஓடி 2 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி (Virat Kohli) உள்ளிட்டோர் இதற்கு தங்களின் ஆதங்கத்தை களத்திலேயே தெரிவித்தனர். 

மூன்றாவது முறை ரோஹித் பேட்டிங்

தொடர்ந்து, முதல் சூப்பர் ஓவரில் இந்தியாவின் பேட்டிங்கின்போது, ரோஹித் சர்மா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஐந்தாவது பந்தில் சிங்கிள்ஸை அடித்து நான்-ஸ்ட்ரைக்கர் முனைக்கு வந்தார். கடைசி பந்தை எதிர்கொள்ள ஜெய்ஸ்வால் காத்திருந்த சமயத்தில், ரோஹித் சர்மா ரிட்டையர்ட் முறையில் வெளியேறினார். அவருக்கு பதில் ரின்கு சிங் மறுமுனைக்கு வந்தார். இருப்பினும் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட, இரண்டாவது சூப்பர் ஓவரை இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வந்தது.

தொடர்ந்து, இம்முறை ரோஹித் சர்மா – ரின்கு சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்கியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. முதல் சூப்பர் ஓவரில் வெளியேறியவர் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய வரலாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும், ரோஹித் சர்மா பேட்டிங் செய்து, இந்திய அணியும் வெற்றி பெற்றுவிட்டது. 

தற்போது ரோஹித் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தது சரியா, தவறா என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்திய மூத்த வீரர் பார்த்தீவ் படேல்,”ரோஹித் சர்மா ரிட்டயர்ட்டான நிலையில், இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தார். அவர் ரிட்டயர்ட் அவுட் தான் ஆனார், ரிட்டயர்ட் ஹர்ட் ஆகவில்லை. நடுவர்கள் இதனை தவறவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

சூப்பர் ஓவர் குறித்து கிரிக்கெட் விதி:

விதி 25.4.1 – ஒரு பேட்டர் தனது இன்னிங்ஸின் போது எந்த நேரத்திலும் பந்து டெட் ஆகும்போது ரிட்டயர்ட் பெறலாம். ஆட்டத்தை தொடர அனுமதிக்கும் முன், நடுவர்கள் ஒரு பேட்ஸ்மேன் ஓய்வு பெறுவதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

விதி 25.4.2 – நோய்வாய்ப்பட்டாளோ, காயம் அல்லது வேறு ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தாலோ ஒரு பேட்டர் ரிட்டயர்ட் ஆனால், அந்த பேட்டர் தனது இன்னிங்ஸை மீண்டும் தொடங்க தகுதியுடையவர். எந்த காரணத்திற்காகவும் இது நடக்கவில்லை என்றால், அந்த பேட்டரை ‘ரிட்டயர்ட் – நாட் அவுட்’ என்று பதிவு செய்ய வேண்டும்.

விதி 25.4.3 – 25.4.2 விதியில் இருந்ததை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் ஒரு பேட்டர் ரிட்டயர்ட் ஆனால், அந்த பேட்டரின் இன்னிங்ஸ் எதிரணி கேப்டனின் ஒப்புதலுடன் மட்டுமே தொடங்கப்படலாம். எந்த காரணத்திற்காகவும் அவரது இன்னிங்ஸ் தொடரவில்லை என்றால், அந்த பேட்டர் ‘ரிட்டயர்ட் – அவுட்’ என்று பதிவு செய்யப்பட வேண்டும். 

மேலும், ஒரு சூப்பர் ஓவரில் ஒரு பேட்டர் அவுட்டானால், அவரால் அடுத்த சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய களமிறங்க முடியாது என்பது விதியாகும் (Tied Super Over Rules). எனவே, ரோஹித் இரண்டாவது சூப்பர் ஓவரில் விளையாடியது தொடர்ந்து குழப்பத்தில் நீடிக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.