திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ரயில் நிலையத்தில் தமிழ் தெரியாத ரயில்வே பணியாளரால் டிக்கெட் பெறுவதில் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். பொங்கல் விடுமுறைக்குப் பின் அந்தியோதயா ரயிலில் செல்வதற்கு டிக்கெட் கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்த ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தின்கீழ் செயல்படுகிறது. வடமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், சூப்பர் பாஸ்ட் ரயில்கள், இன்டர்சிட்டி ரயில்கள் உட்பட பல ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. வள்ளியூரை மையமாக வைத்து கள்ளிகுளம், ராதாபுரம், வடக்கன்குளம், கூடங்குளம், திசையன்விளை போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வியாபாரம், பணி நிமித்தம் காரணமாக கோவை, திருச்சி, சென்னை, மும்பை போன்ற பகுதிகளுக்கு அடிக்கடி செல்கிறார்கள்.
இதற்காக அவர்களுக்கு ரயில்கள் உதவுகின்றன. மேலும் தங்கள் ஊர் கொடை விழா திருவிழாக்கள் மற்றும் பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு இவர்கள் ரயில்களை பிடித்து ஊருக்கு வந்து செல்கிறார்கள். இதனால் திருநெல்வேலி- கன்னியாகுமரி ரயில்வே மார்க்கத்தில் வள்ளியூர் ரயில் நிலையம் முக்கிய இடத்தை வகிக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த காலங்களில் முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக ஒரே ஒரு சிறப்பு ரயில் மட்டுமே இயக்கப்பட்டது. இம்முறை சிறப்பு ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படாததால் பலர் நாகர்கோவில் முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் முன்பதிவு இல்லாத அந்தியோதயா விரைவு ரயிலில் பயணம் செய்ய வள்ளியூர் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தனர்.
ஆனால், வள்ளியூர் ரயில் நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இந்தி மொழி தெரிந்த பயணச்சீட்டு விநியோகிப்பாளர் பணியில் அமர்ந்து பயணச்சீட்டு விநியோகம் செய்து வந்தார். அப்போது ஏராளமான பயணிகளுக்கும் அவருக்கும் இடையே மொழி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் பயண சீட்டு விநியோகம் தாமதமாக நடந்து வந்தது. இதனால் அந்தியோதயா ரயிலுக்காக பலர் பயணச்சீட்டு எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் அங்கு போலீஸார் நிறுத்தப்பட்டு பயண சீட்டு விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் இடம்பிடிக்க கூட்டம் முண்டியடித்தது. பலர் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு ஓடோடிவந்து ரயிலை பிடித்தனர். பயணிகள் கூட்டம் அதிகமானதால் 2 நிமிடம் மட்டுமே நிற்கும் அந்தியோதயா ரயில் 5 நிமிடம் நிற்கும் என்று ஒலி பெருக்கியில் ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி காலதாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் டிக்கெட் பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம், ரயில்வே பணியாளர் தமிழ் தெரியாமல் பயணிகளிடம் பேசுவதற்கு முடியாமல் திணறியது போன்ற காரணங்களால் ரயில் தாமதமாக புறப்பட வேண்டியிருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “பல கிராமப்புறங்களில் உள்ளடக்கிய ரயில் பயணிகளுக்கு பயன்தரும் வகையில் செயல்படும் வள்ளியூர் ரயில் நிலையம் ஆண்டிற்கு ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடி வரை வருமானம் ஈட்டுகிறது. இங்கு தமிழ் மொழி தெரிந்த பயண சீட்டு விநியோகிப்பாளரை நியமிக்க வேண்டும் என்பது இப்பகுதி பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது. ரயில்வே நிர்வாகம் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தனர்.