அயோத்தி: அயோத்தியில் லட்சக்கணக்கில் குவிந்துள்ள ராம பக்தர்கள் மிகுந்த பக்தி பரவசத்துடன் மிக நீண்ட வரசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களில் பலர் தங்களின் நீண்ட கால கனவு நனவாகிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் திறக்கப்பட்டதன் முதல் நாளான நேற்று விவிஐபிக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இன்று முதல் பகவான் ராமரை அனைவரும் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று இரவு முதலே பக்தர்கள் அயோத்தி ராமர் கோயில் முன் வரிசையில் நிற்கத் தொடங்கினர். ராமர் கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலையான 13 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ராமர் பாதை முழுவதும் தற்போது பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று காலை கோயில் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் பகவான் ராமரை தரிசித்து வருகிறார்கள்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அயோத்தி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும், பாத யாத்திரையாகவும் பக்தர்கள் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர். பஞ்சாபில் இருந்து அயோத்தி வந்த மணிஷ் வர்மா என்ற பக்தர், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனது வாழ்வின் நோக்கம் பூர்த்தியாகிவிட்டது. எங்கள் முன்னோர்கள் இதற்காக மிகப் பெரிய அளவில் போராடினார்கள். அவர்களின் கனவு தற்போது நனவாகி இருக்கிறது. அயோத்தியில் தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர வேண்டும். இனி யுக யுகமாக ராமர் நம்மை ஆட்சி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
பிகாரின் மதேபுரா நகரில் இருந்து வந்திருந்த பக்தர் நிதிஷ் குமார், “மிகப் பெரிய அளவு மக்கள் கூட்டம் உள்ளது. என்றாலும், இன்று எப்படியும் எனக்கு தரிசனம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது. ராமரை தரிசிக்க வேண்டும் என்ற எனது விருப்பம் நிறைவேறிய பிறகே எனது பயணத்தை தொடங்குவேன். நேற்று சாமி தரிசனம் கிடைக்காது என்று தெரியும் என்றாலும், நேற்றே நான் அயோத்தி வந்துவிட்டேன்” என தெரிவித்தார்.
ராஜஸ்தானின் சிகார் என்ற பகுதியில் இருந்து அயோத்தி வந்துள்ள பக்தரான அனுராக் ஷர்மா, அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி வடிவத்தை கைகளில் ஏந்தியவாறு இருந்தார். “இந்த மாதிரி கோயில் நான் எனது ஊரில் இருந்து எடுத்து வந்துள்ளேன். நேற்று வந்த விமானத்தில் நான் அயோத்தி வந்தேன். அதுமுதல் நான் இங்கே காத்திருக்கிறேன். ராமரை தரிசிக்க வேண்டும் என்ற எனது நெடுநாள் கனவு தற்போது நனவாகப் போகிறது. கனவு நனவான பிறகே நான் ஊர் திரும்புவேன்” என தெரிவித்தார்.
ஏராளமானோர் குழுக்களாக அயோத்திக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். அவ்வாறு 8 பேர் கொண்ட பாதயாத்திரை குழுவோடு வந்த சுனில் மதோ என்பவர், “சத்தீஸ்கரில் இருந்து நாங்கள் பாத யாத்திரையாக அயோத்தி வந்துள்ளோம். நாங்கள் நடந்து வருவதற்கான சக்தியை பகவான் ராமர் வழங்கி உள்ளார். அவர்தான் எங்களை அழைத்துள்ளார். அவர் எங்களை ஆசீர்வதிப்பார்” என தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் இருந்து வந்திருந்த பக்தரான கோபால் கிருஷ்ணா என்பவர், “பகவான் ராமரின் அழைப்பை ஏற்று சில நாட்கள் முன்பாகவே நாங்கள் அயோத்தி வந்துவிட்டோம். காவல்துறை கட்டுப்பாடு அதிகம் இருக்கும், தங்கும் அறைகள் கிடைக்காது, எனவே இப்போது போக வேண்டாம் என பலர் கூறினார்கள். இங்கு வந்த பிறகு இங்குள்ள ஆசிரமம் ஒன்றில் நாங்கள் தங்கினோம். தற்போது தரிசனத்துக்காக காத்திருக்கிறோம்” என குறிப்பிட்டார்.
அயோத்திக்கு வரும் பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷங்களை முழங்கியவாறும், ராமர் குறித்த கீர்த்தனைகளை பாடியவாறும் உள்ளனர். இதனால், அயோத்தி முழுவதும் ராம நாமம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பக்தர்கள் மிகுந்த பக்தி பரவசத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பலர், ஆலயத்தின் முன் நின்றும், ஆலயத்தின் கதவுகள் முன் நின்றும் புகைப்படங்களையும் ஃசெல்பிக்களையும் எடுத்துக்கொள்கின்றனர்.