நாடாளுமன்ற வளாக பாதுகாப்புக்கு 140 சி.ஐ.எஸ்.எப். வீரர்களை பணியமர்த்த முடிவு

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் வருகிற 31-ந்தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான நடவடிக்கைகள் தொடங்க உள்ளன. இதனை முன்னிட்டு பார்வையாளர்களை கட்டுப்படுத்தவும் மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனையிடவும் என்று கூடுதலாக வீரர்களை பாதுகாப்பு பணிக்காக அமர்த்துவதற்கு முடிவாகி உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

இதன்படி, மத்திய தொழில் பாதுகாப்பு படையை (சி.ஐ.எஸ்.எப்.) சேர்ந்த மொத்தம் 140 வீரர்கள் நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதன்படி, வருகிற 31-ந்தேதி முதல் மற்ற பாதுகாப்பு முகமைகளுடன் கூட, இவர்களும் நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

அவர்கள், விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அளிப்பது போன்று, புதிய மற்றும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுப்பாட்டை மேற்கொள்வர். எக்ஸ்-ரே உபகரணங்களை கொண்டு, நாடாளுமன்றத்திற்கு வர கூடிய நபர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் பரிசோதனை செய்யப்படும்.

நபர்களின் காலணிகள், கனத்த உடைகள், பெல்ட்டுகள் உள்ளிட்டவற்றை எக்ஸ்-ரே ஸ்கேனர் வழியே நகர்ந்து போக செய்து, அவை பரிசோதிக்கப்படும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ஆயுத போலீஸ் படையாக, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளது. ஏறக்குறைய 1.70 லட்சம் வீரர்கள் நாட்டிலுள்ள 68 உள்நாட்டு விமான நிலையங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி அவையில் எம்.பி.க்கள் இருந்தபோது, திடீரென சிலர் உள்ளே அத்துமீறி நுழைந்தனர். அவர்கள், மஞ்சள் வண்ண புகையை பரவ செய்தனர். இதனை தொடர்ந்து, அவையின் உள்ளே புகுந்த 2 பேர் மற்றும் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் எதிரொலியாக, விரிவான பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற பாதுகாப்பு சேவை, டெல்லி போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப்.பின் நாடாளுமன்ற பணி குழு ஆகியவற்றுடன் இணைந்து இந்த பாதுகாப்பு பணியை அவர்கள் மேற்கொள்வார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.