”தாம்பத்திய உறவு தொடர்பான பிரச்னைகளில், ஆண்களைவிட பெண்களே அதிகம் பிரச்னைகளை சந்திப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், பாலியல் மருத்துவர்களை சந்திக்க வருகிற பெண்களின் எண்ணிக்கை வெறும் 2-ல் இருந்து 3 சதவிகிதம் மட்டுமே” என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரியை பகிர்ந்துகொள்கிறார்.
”தாம்பத்திய உறவில் பிரச்னைகளைச் சந்திக்கிற பெண்கள் பெரும்பாலும் எங்களை அணுகுவதில்லை. ‘யாராவது பார்த்துட்டா…’, ‘மத்தவங்க என்ன நினைப்பாங்க…’ என்கிற பயமும் தயக்கமும்தான் இதற்கு காரணங்கள். இவற்றையெல்லாம் மீறி, என்னைச் சந்திக்க விரும்புகிற பெண்களும் பெரும்பாலும் வீடியோ காலில்தான் பேசுவார்கள். அவர்களில் சிலர் வெளிமாநிலங்களில் இருந்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து பேசுவதும் இதற்கு ஒரு காரணம் எனலாம். அப்படித்தான் அந்த இளம்பெண் என்னிடம் பேசினார். ‘டாக்டர் எங்களுக்கு கல்யாணமாகி 6 மாசமாச்சு. இதுவரைக்கும் செக்ஸ் நடக்கல. இனியும் நடக்கிற மாதிரி தெரியலை’ என்றார் வேதனையுடன்.

இந்தப் பிரச்னையில் பெண்களால் பெரியளவில் எந்த முன்னெடுப்பும் செய்ய முடியாது. கணவரிடம் பேசவே முடியாது. இலைமறை காயாக டாக்டரை பார்க்கலாமா என்றாலும், ‘என்னை ஆம்பளை இல்லைங்கிறியா’ என்று ஆவேசப்படுவார்கள். பையனின் குடும்பத்திற்கு இது தெரிய வந்தால், ‘எங்க பையன் நார்மலா தான் இருக்கான். எங்க பரம்பரையில இப்படி யாருக்கும் நிகழ்ந்ததில்லை’ என்று சொல்லி, மகனை, டாக்டரை பார்க்கவிட மாட்டார்கள். தவிர, மருமகளையும் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேச முடியுமோ அந்தளவுக்குப் பேசி விடுவார்கள். அந்தப் பெண்ணுக்கும் இவையெல்லாம் நடந்தன. மறுபடியும் என்னுடன் போன் காலில் பேசினார்.
‘டாக்டர் எங்களால சிகிச்சைக்கு வர முடியாது. கணவர் ஒத்துழைக்க மாட்டேங்கிறார்’ என்றார். நேரில் வர முடியவில்லை என்றாலும், இரண்டு பேரும் வீடியோ காலில் வாருங்கள் என்றேன். அதற்கும் அந்தக் கணவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரை ‘உங்களுக்கு ஆண்மைக்குறைபாடு இருக்கு’ என்று சொல்லப் போவதற்காக அழைக்கிறேன் என்றே நினைத்துக்கொண்டார். செக்ஸை பொறுத்தவரை, இந்தளவுக்குத்தான் படித்தவர்களிடம்கூட விழிப்புணர்வு இருக்கிறது.

இதுபோன்ற சூழலில், சில பெண்கள் விவாகரத்து, மறுமணம், தவறான தொடர்புகள் என்று போய் விடுகிறார்கள். தாம்பத்திய உறவு கொள்வதில் சிக்கல் இருப்பவர்கள் எங்களிடம் நேரில் வந்தால், சில சிட்டிங்ஸ் செக்ஸ் தெரபியிலேயே பிரச்னையை சரி செய்துவிடுவோம். நாங்கள் சொல்லித்தருவதை அவர்கள் பெட்ரூமில் செய்ய வேண்டும். அவற்றைச் செய்யச் செய்ய பிரச்னை சரியாகி விடும். கொஞ்சம் யோசியுங்கள்” என்கிறார் டாக்டர் காமராஜ்.