விசா பிரச்சனை தீர்ந்தது…இந்த வார இறுதியில் அணியுடன் இணையும் சோயப் பஷீர்

புதுடெல்லி,

இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.

இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி, அனுபம் வாய்ந்த ஜாக் லீச் மற்றும் சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி என இரண்டு அறிமுக சுழற்பந்து வீச்சாளர்களையும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி இருக்கும் ரெஹான் அஹ்மத் ஆகியோரையும் தேர்வு செய்தது.

இதில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சோயப் பஷீர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவர் இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்தவர். இந்நிலையில் 20 வயதான சோயப் பஷீர்-க்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் நாட்டினர் மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பிற நாட்டினர் இந்தியாவிற்கு வர வேண்டும் என்றால் கடினமான விசா நடைமுறை உள்ளது. குறைந்தது ஏழு நாட்கள் கழித்தே அவர்களுக்கு விசா வழங்கப்படும். முதல் டெஸ்ட் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக இந்தியா வர இங்கிலாந்து திட்டமிட்டு இருந்தது. அதனால் விசாவுக்கு விண்ணப்பம் செய்வதிலும் அந்த அணி தாமதம் செய்து இருக்கிறது. அதில் தான் சோயப் பஷீர் சிக்கிக் கொண்டார்.

இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவரை பயன்படுத்தலாம் என திட்டமிட்டு இருந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், “நான் மனமுடைந்து போயிருக்கிறேன். அந்த இளம் வீரருக்கு இது விரக்தியான சூழ்நிலை” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில், தற்போது சோயப் பஷீரூக்கு இந்திய விசா கிடைத்துள்ளது. அவர் இந்த வார இறுதியில் அணியுடன் இணைவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், நிலைமை இப்போது தீர்க்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.