IND vs ENG: Bazball-ஐ படுகுழியில் தள்ளிய இந்திய ஸ்பின்னர்கள்… டாப் ஆர்டர் காலி!

Ravichandran Ashwin, IND vs ENG 1st Test: சொந்த மண்ணில் சுமார் 13 வருடங்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் சீனியர்களான விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகிய மூவரும் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணியும், இந்திய ஆடுகளங்களில் பாஸ்பால் கோட்பாடு சரிப்பட்டு வருமா என்ற சோதனை முயற்சியுடன் இங்கிலாந்து அணியும் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றன.

பிளேயிங் லெவனில் யார் யார்?

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு டாஸ் வீசப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்றே அறிவிக்கப்பட்டது. ஜாக் லீச், டாம் ஹார்ட்லி, ரெஹன் அகமது ஆகிய மூன்று சுழற்பந்துவீச்சாளருடனும், ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஆக மார்க் வுட் உடன் இங்கிலாந்து களமிறங்கியிருக்கிறது. 

பென் ஸ்டோக்ஸ் அறுவை சிகிச்சைக்கு பின் விளையாட வந்திருப்பதால் அவர் பந்துவீசுவாரா என்ற கேள்வியும் உள்ளது. எனவே, ஜோ ரூட் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளராக வரும்போது 5 பேர் பந்துவீசுவார்கள். இந்திய அணியை பொறுத்தவரை கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். கேஎல் ராகுல் பேட்டராக விளையாடுகிறார். அஸ்வின் – ஜடேஜா – அக்சர் என சுழற்பந்துவீச்சு கூட்டணியுடனும், பும்ரா – சிராஜ் வேகப்பந்துவீச்சு கூட்டணியும் தாக்குதலை தொடங்கியது.

அஸ்வின் வைத்த பொறி

இருப்பினும், ஜாக் கிராலி – பென் டக்கெட் ஜோடி வேகப்பந்துவீச்சை வெளுத்தெடுத்தது. 8 ஓவர்களிலேயே 40 ரன்களுக்கு மேல் இந்த ஜோடி அடித்தது. அந்த வகையில், 9ஆவது ஓவரில் ஜடேஜா பந்துவீச வந்தார். அடுத்த ஓவரில் அஸ்வினும் பந்துவீசினார். இந்த பார்ட்னர்ஷிப் 50 ரன்களை தாண்டிய பின்னர், அஸ்வின் வீசிய 12ஆவது ஓவரில் ஒரு திருப்புமுனை கிடைத்தது. 

அஸ்வின் இடதுகை பேட்டர் பென் டக்கெட்டுக்கு லைனை சற்று மாற்றி, மாற்றி வீசி வந்தார். ரன்அப்பிலும் சற்று வேரியேஷனை காட்டி பந்து எப்போது திரும்பும், எப்போது நேராக வரும் என்பதை கணிக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தி பொறிவைத்து அந்த விக்கெட்டை எடுத்தார் எனலாம். பென் டக்கெட் அந்த பந்தை ஸ்பினுக்கு ஆடிய நிலையில், பந்து நேராக வந்து காலை தாக்கி எல்பிடபிள்யூ மூலம் விக்கெட் கிடைத்தது. 

டக்கெட் சிராஜ், பும்ரா ஆகியோரின் பந்தை பவுண்டரிகளை பறக்கிவிட்டார். அஸ்வினின் முதல் ஓவரிலேயே மூன்று, நான்கு பந்துகளை டாட் வைத்த பின் அவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடித்து 1 ரன்னை எடுத்தார். தொடர்ந்து தனது ஆக்ரஷோத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், அஸ்வினின் பொறியில் சிக்கி 35 (39) ரன்களில் ஆட்டமிழந்தார். 

That’s Lunch on Day 1 of the first #INDvENG Test! #TeamIndia scalp England wickets in the First Session!

wickets for @ashwinravi99
wicket for @imjadeja

Stay Tuned for Second Session

Scorecard https://t.co/HGTxXf8b1E@IDFCFIRSTBank pic.twitter.com/5MYLO4LwXs

— BCCI (@BCCI) January 25, 2024

பேர்ஸ்டோவ், ரூட் அவுட்

அடுத்து வந்த ஓல்லி போப் தடுமாறி வந்த நிலையில், ஜடேஜா பந்துவீச்சில் ரோஹித்திடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து, ஜாக் கிராலி அஸ்வினிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். மிட் ஆப் திசையில் சற்று முன் பக்கம் நின்று கொண்டிருந்த சிராஜிடம், கிராலி இறங்கி வந்து அடிக்க முயற்சி செய்து நேராக கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ந்து, ரூட் – பேர்ஸ்டோவ் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

சுமார் 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், உணவு இடைவேளைக்கு முன் இங்கிலாந்து 28 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்தது. தொடர்ந்து, இடைவேளைக்கு பின் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நன்றாக செட் ஆகியிருந்த பேர்ஸ்டோவ் 37 ரன்களில் அக்சர் படேலிடம் வீழ்ந்தார். அதேபோல் ரூட்டும் 29 ரன்களை எடுத்து ஜடேஜாவிடம் வீழ்ந்தார்.

ரன்கள் வந்துகொண்டயிருந்தாலும் விக்கெட்டுகளும் ஒருபக்கம் சாய்கிறது. எனவே, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு தாக்குதலை தகர்த்து ரன்களை குவிக்கவும், அதிரடியாக குவிக்கப்படும் ரன்களை கட்டுப்படுத்த இந்தியாவும் கடும் போராட்டத்தை முன்னெடுக்கும், போட்டியில் அனல் பறக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.