`Awe’, `Kalki’, `Zombie Reddy’ ஆகிய தெலுங்குப் படங்களை இயக்கிய பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் சமீபத்தில் ‘Hanu Man’ திரைப்படம் வெளியாகியிருந்தது.
இத்திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பிரசாந்த் வர்மாவிடம், விஷுவல் எஃபெக்ட்ஸ், திரைக்கதை, வசனங்கள் எனப் பல விமர்சனங்களைச் சந்தித்த ‘ஆதிபுருஷ்’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதாவது, ‘உங்கள் படத்தில் சில தவறான விஷயங்களைச் செய்யாமல் இருக்க ‘ஆதிபுருஷ்’ படத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டீர்களா?’ என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “’ஆதிபுருஷ்’ படம் வந்திருந்தாலும், வராமல் இருந்திருந்தாலும் இப்போது இந்தப் படத்தை தற்போது நான் எப்படி எடுத்திருக்கிறேனோ அதேபோல்தான் எடுத்திருப்பேன்.
அந்தப் படம் என்னுடைய தயாரிப்பைப் பாதிக்கவில்லை. சில காட்சிகள் அந்தப் படத்தில் நன்றாக இருந்தன. சில காட்சிகள் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. நான் எடுத்திருந்தால் அந்தக் காட்சிகளைச் சற்று வித்தியாசமாக எடுத்திருப்பேன்.

எனக்கு மட்டும் அல்ல. பொதுவாக ஒரு படத்தைப் பார்த்தால் எல்லா இயக்குநர்களுக்கும் தோன்றும் விஷயம்தான். ஒரு பார்வையாளராக எனக்கு ‘ஆதிபுருஷ்’ படத்தில் சில காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.